ஜெனிவா, ஒஸ்லோ பேச்சுவார்த்தைகளை புலிகளே குழப்பினர்: மஹிந்த சுட்டிக்காட்டு

இலங்கையின் முன்னாள் படைத்தளபதிகளுக்கு எதிராக பிரிட்டனால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிக்கின்றேன். வாக்கு அரசியலுக்காகவே இப்படியான நகர்வுகள் பிரிட்டனில் இடம்பெறுகின்றன.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

” இலங்கையின் முன்னாள் படைத்தளபதிகளுக்கு எதிராக தடைகளை விதிப்பதற்காக பிரிட்டனால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் எங்கும் நிரூபிக்கப்படவில்லை. புலிகளுக்கு எதிராக போரை முன்னெடுப்பதற்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக நானே அப்போது முடிவெடுத்தேன். அந்த முடிவை பாதுகாப்பு தரப்பின் செயல்படுத்தினர்.” எனவும் விசேட அறிக்கையொன்றின் ஊடாக மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

2002 இல் சமாதான ஒப்பந்தம் அமுலில் இருந்தபோதிலும், 2002 பெப்ரவரி முதல் 2005 செப்டம்பர் இறுதி வரை விடுதலைப் புலிகள் 363 கொலைகளைச் செய்தனர்.

2005 நவம்பர் மாதம் நான் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு புலிகளின் தாக்குதல் உக்கிரமடைந்தது. இப்படி தாக்குதல்கள் நடந்தும் சமாதானத்துக்காக ஜெனிவா மற்றும் ஒஸ்வோவில் நடைபெற்ற சமாதான பேச்சுகளில் எமது அரசாங்கம் பங்கேற்றது. இவற்றை புலிகள் ஒருதலைபட்சமாக நிறுத்தினர்.

2006 ஜுன் மாதம் கெப்பட்டிபொல தாக்குதலில் 64 பேர் உயிரிழந்தனர். 86 பேர் படுகாயமடைந்தனர். 2006 ஜுலையில் மாவிலாறுவை புலிகள் மூடினார்கள். நீர்விநியோகத்தை தடுத்தனர். இதனையடுத்தே இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்து, 2009 மே 19 வரை முன்னெடுத்தோம்.” எனவும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

போரின்போது பாரியளவு மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன என பிரிட்டனால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிக்கின்றேன். புலிகளுக்கு எதிராகவே நாம் போர் செய்தோம். தமிழ் மக்களுக்கு எதிராக போர்செய்யவில்லை என்பதை தெளிவாக கூறுகின்றோம்.

2010 ஜனாதிபதி தேர்தலின்போது இராணுவத் தளபதியாக இருந்த பொன்சேகா தேர்தலில் போட்டியிட்டார். அவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்தது. வடக்கு, கிழக்கில் 60 சதவீதமான வாக்குகளைப் பெற்றார். இதன்மூலமும் பிரிட்டனின் குற்றச்சாட்டுகள் போலியாகின்றன.” எனவும் மஹிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறி பின்னர் ஜனநாயக வழிக்கு திரும்பிய கருணா அம்மானுக்கு தடை விதிக்கப்பட்டமையானது, புலிகளுக்கு சார்பான டயஸ்போராக்களை திருப்திப்படுத்தும் செயலாகும் என்பது தெளிவு.” – என மஹிந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles