இந்த வருடத்தின் நேற்றுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 42,000க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் அவர்களில் 25 வீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவு அது தொடர்பில் தெரிவிக்கையில், டெங்கு நோயிலிருந்து சிறுவர்களைப் பாதுகாப்பது தொடர்பில் அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினரும் பெற்றோர்களும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
அந்த வகையில் கடந்த 2 தினங்களாக பாடசாலை மற்றும் பாடசாலையை அண்டிய பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பாடசாலையின் சுற்றாடல் பகுதிகள் துப்புரவு செய்யப்படும் வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பிரிவு தெரிவித்தது.
அதேவேளை, இந்த வருடத்தின் இது வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 42,184 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன் மேல் மாகாணத்திலேயே அதிக டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் அந்த பிரிவு தெரிவித்தது.
அந்த வகையில் நாட்டின் பல பகுதிகளிலும் சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவுகள் பல டெங்கு எச்சரிக்கை வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளதுடன் அவ்வாறு 61 சுகாதார மருத்துவ அதிகாரி நிர்வாகப் பிரிவுகள் இனங்காணப்பட்டு எச்சரிக்கை வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த பிரிவு தெரிவித்துள்ளது.
