தொழிலாளர் தேசிய சங்கத்தின் மே தின விழா எதிர்வரும் ஏப்ரல் 28 ஆம் திகதி தலவாக்கலையில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடத்தப்படவுள்ளது என்று சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
வலப்பனை பிரதேசத்தில் இராகலை, வலப்பனை மற்றும் உடப்புஸ்ஸலாவ பிரதேச தொழிலாளர் தேசிய சங்க அங்கத்தவர்கள் உள்ளிட்ட மக்கள் சந்திப்பு இராகலை புறநெகும மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம், மயில்வாகனம் உதயகுமார் உட்பட தொழிலாளர் தேசிய சங்க நிதி காரியதர்சி சோ. ஸ்ரீதரன் , சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் எஸ்.சிவனேசன் ஆகியோருடன் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது உரையாற்றுகையிலேயே திகாம்பரம் எம்.பி. மேற்படி தகவலை வெளியிட்டார்.
“ ஐந்து வருடங்களுக்கு பிறகு தொழிலாளர் தேசிய சங்கம் உலக தொழிலாளர் தினமான மேதின விழாவை தலவாக்கலையில் நடத்தவுள்ளது.
இதை மே முதலாம் திகதி நடத்தாமல், ஏப்ரல் 28.04.2024 அன்று மே தின கூட்டம், பேரணியை நடத்தவுள்ளோம்.
மே முதலாம் திகதி சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பில் மே தின கூட்டம் நடக்கவுள்ள நிலையில், அதற்கு எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தலவாக்கலையில் ஏப்ரல் (28) ஆம் திகதி இடம்பெறவுள்ள மே தின விழாவில் சஜித் பிரேமதாச கலந்துகொள்வார்.” –எனவும் திகாம்பரம் கூறினார். குறித்த மே தின நிகழ்வோடு தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கையை தொழிலாளர் தேசிய சங்கம் ஆரம்பிக்கவுள்ளது.
ஆ.ரமேஷ்
