‘துறைமுக நகர சட்டமூலம் அரசமைப்புக்கு முரணானது அல்ல’

” கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலமானது அரசமைப்பின் பிரகாரமே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு சட்டத்தையும் இதுவிடயத்தில் மீறவில்லை. உயர்நீதிமன்றம் திருத்தங்களை முன்வைத்தால் அதனையும் செய்வதற்கு அரசு தயாராகவே இருக்கின்றது.” – என்று அமைச்சர் மஹிந்தனந்த அளுத்கமகே நேற்று தெரிவித்தார்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் ஆளுங்கட்சி எம்.பியான விஜயதாச ராஜபக்சவால் முன்வைக்கப்பட்ட கருத்துகளுக்கு பதிலடி கொடுக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” துறைமுக நகரம் தொடர்பான சட்டமூலமானது சட்டபூர்வமாகவே முன்வைக்கப்பட்டுள்ளது. இதில் எவ்வித ஒளிவுமறைவும் கிடையாது. வரிச்சட்டம், காணிச்சட்டம், நிதிச்சட்டம் ஆகியவற்றின் பிரகாரமே கொண்டுவரப்பட்டுள்ளது. அரசமைப்பு மீறப்படவில்லை. வேலைத்திட்டம் சட்டப்பூர்வமானது என சட்டமா அதிபரும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, குறித்த சட்டமூலத்திலுள்ள ஏதேனும் சரத்து அரசமைப்புக்கு எதிரானது என உயர்நீதிமன்றம் சட்டவியாக்கியானம் வழங்கினால் திருத்தம் மேற்கொள்வதற்கும் அரசு தயாராகவே இருக்கின்றது.

விஜயதாச ராஜபக்ச ஆளுங்கட்சி கூட்டங்களுக்கு வருவதில்லை. அவருக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால் அது பற்றி ஆளுங்கட்சி குழுக்கூட்டத்தில் கேள்வி எழுப்பலாம். 20 ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டபோதும் இதேபோன்றுதான் செயற்பட்டார். இறுதியில் ஆதரவாக வாக்களித்தார்.

விஜயதாச ராஜபக்சவுக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப்பதவி கிடைக்கவில்லை என்ற கவலை உள்ளது. அதற்காகவே இல்லாத ஒன்றை உருவாக்கி, அரச எதிர்ப்பு அலையை உருவாக்குவதற்கு முற்படுகின்றார். ” – என்றார்.

Related Articles

Latest Articles