தேர்தலை ஒத்திவைப்பதாக இருந்தால் இறுதிநேரம்வரை காத்திருக்காமல், தேர்தல் ஆணைக்குழுவுடன் பேச்சுநடத்தி உடனடியாக அரசாங்கம் முடிவொன்றை எடுக்கவேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.
கண்டியில் நேற்று (12) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ரணில் விக்கிரமசிங்க இந்த வலியுறுத்தலை விடுத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” கொரோனா வைரஸ் மீண்டும் பரவுகின்றது. அவதானமாக இருக்குமாறு எனக்கு நேற்று (நேற்றுமுன்தினம்) அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது. அதன்காரணமாகவே பாதுகாப்பான முறையில் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளேன்.
‘கொரோனா’ வைரஸ் பரவியுள்ளதா என்பதை கண்டறிவதற்காக பிசிஆர் பரிசோதனைகளை அதிகரிக்குமாறு ஆரம்பத்திலேயே நான் வலியுறுத்தி இருந்தேன். அவ்வாறு செய்திருந்தால் இன்று இந்நிலைமை ஏற்பட்டிருக்காது. ஓரளவேணும் நிலைமையை கட்டுப்படுத்தியிருக்கலாம்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன என்று பஸில் ராஜபக்ச அறிவித்துள்ளார்.
‘கொரோனா’ முதலாவது தாக்கத்தின்போது, அதனை கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி நாட்டை முடக்கினார். அதற்கு நானும் ஒழு ஆதரவு வழங்கினர். இதனால் என்னை ‘டீல்’ காரர் என்றுகூட சிலர் விமர்சித்தனர். அப்போதுகூட பரிசோதனையை அதிகரிக்குமாறே நான் கோரிக்கை முன்வைத்திருந்தேன்.
அதனை செய்யாமல், தேர்தலை இலக்காகக்கொண்டு அரசியல் இலாபம் தேடும் நோக்கில் 5 ஆயிரம் ரூபா பங்கிடப்பட்டது. அவசரமாக தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவுக்கும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.
உண்மை நிலைமை என்னவென்று சுகாதார சேவைகள் பணிப்பாளரும் கூறுவதில்லை. உலக சுகாதார நிறுவனத்தின் கொழும்பு கிளையும் உரிய தகவல்களை வெளியிடுவதில்லை.
முதலாம் கொரோனாவில் இருந்து மீள்வதற்கே எமக்கு 6 ஆயிரம் மில்லியன் டொலர் தேவைப்படுகின் றது. இந்நிலையில் 2ஆவது அலை ஏற்பட்டால் இத்தொகை இரட்டிப்பாகும்.
எனவே, தேர்தலை ஒத்திவைப்பதற்காக இருந்தால், இறுதிநேரம்வரை காத்திருக்காமல், தேர்தல் ஆணைக்குழுவுடன் பேச்சு நடத்தின் உடடியாக முடிவொன்றை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றே ன். அவ்வாறு இல்லாவிட்டால் வீண் செலவுகளே அதிகரிக்கும்.
” – என்றார்.