தொழிலாளர்களின் பொறுமையை சோதித்தால் விளைவு பாரதூரமாக அமையும் – தோட்டக் கம்பனிகளுக்கு ராதா எச்சரிக்கை

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பான வர்த்தமானியை தள்ளுபடி செய்ய முடியாது என நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்கள் மீது அடாவடித் தனமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தோட்டத் தொழிலாளர்கள் தமது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் இன்று கருத்து வெளியிட்ட அவர் கூறியவை வருமாறு,

” தொழிலார்களின் ஆயிரம் ரூபா சம்பள விடயத்தில் ஆரம்பம் முதலே முட்டுக்கட்டையாக இருந்தவர்கள் தோட்ட கம்பனிக்காரர்களே .அவர்கள் எந்த காரணம் கொண்டும் அந்த சம்பள உயர்வை தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்க கூடாது என்ற என்னத்திலேயே செயற்பட்டு வந்தனர்.

ஆனால் இன்று இந்த விடயம் நீதிமன்றம் வரை சென்றுவிட்டது.நீதிமன்றம் வர்த்தமானியை நீக்க முடியாது என தீர்ப்பளித்துள்ள நிலையில் இன்று தோட்ட கம்பனிகள் தொழிலார்களை பழிவாங்குகின்ற செயலில் ஈடுபட்டு வருகின்றது.

இன்று (08.04.2021) லிந்துலை பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் இவருடைய இறுதிக்கிரியைகளுக்காக வழமையாக குளி வெட்டுவதற்காக வழங்கப்படுகின்ற நால்வரை வழங்க முடியாது எனவும் அதனை மரண வீட்டுக்காரர்கள் பணம் கொடுத்து செய்து கொள்ள வேண்டும் என மனிதாபிமானம் அற்ற முறையில் நடந்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்த நடைமுறையானது கடந்த பல வருடங்களாக நடைமுறையில் இருந்து வருகின்றது.இந்த நடைமுறையை இப்பொழுது நடைமுறைபடுத்த முடியாது என கூறுவது எந்த விதத்தில் நியாயமானது.?

அதே நேரம் தோட்டத்தில் வேலை செய்து ஒய்வூதியம் பெற்று சென்றவர்கள் பொதுவாகவே நாட் கூலிகளாக வேலை செய்வது வழக்கம்.அவர்களில் அநேகமானவர்கள் வயது அதிகமானவர்களே.60 முதல் 65 வயதை தான்டியவர்களாகவும் அவர்கள் இருப்பார்கள்.அவர்களுக்கு வேறு எந்த கொடுப்பனவும் வழங்கப்படமாட்டாது.தனியே நாட்சம்பளம் மாத்திரமே வழங்கப்படும்.ஆனால் அவர்களிடமும் இப்பொழுது வேலைப்பழுவை அதிகரித்துள்ளனர்.

மேலும் தற்பொழுது தோட்டங்களில் தோட்டங்களை துப்பரவு செய்வதற்கான எந்த ஒரு நடவடிக்கையையும் தோட்ட நிர்வாகம் மேற்கொள்வதில்லை.இதன் மூலம் தோட்டங்களை காடுகளாக்கி தனியாருக்கு வழங்குவதற்கு அல்லது சிறு தோட்ட உரிமையாளர்களுக்கு வழங்குவதற்கு திட்டமிட்ட அடிப்படையில் செயற்படுகின்றார்களா?என்ற கேள்வியும் எங்கள் மத்தியில் ஏற்படுகின்றது.

அது மட்டுமல்லாமல் ஒரு நாள் சம்பளத்திற்கு எடுக்கப்படுகின்ற தேயிலை கொழுந்தின் எடையையும் அதிகரித்து இருக்கின்றார்கள்.இது தொழிலாளர்களுக்கு ஒரு பெரும் சுமையாக அமைந்துள்ளது.

தோட்ட தொழிலாளர்கள் கடந்த சில மாதங்களாகNவு பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.எல்லா தோட்டங்களிலும் ஏதோ ஒரு போராட்டம் நடந்து கொண்டிருக்கின்றது.இந்த நிலைமை தொடருமாக இருந்தால் தோட்டங்களில் அமைதியின்மை ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது.

எனவே தோட்டத் தொழிலாளர்களின் பொறுமையை சோதிக்க யாராவது நினைத்தால் அதன் விளைவுகள் மிகவும் பாரதூரமாக இருக்கும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

நாங்கள் அமைதியாக இருப்பது யாருக்கும் பயந்து கொண்டு என யாரும் நினைத்தால் அது அவர்களின் முட்டாள்தனம் எனவே தோட்டத் தொழிலாளர்களின் விடயத்தில் தோட்ட கம்பனிகள் ஒரு சரியான நடைமுறையை பின்பற்றாவிட்டால் தோட்ட நிர்வாகத்திற்கு தொழிலாளர்கள் பாடம் புகட்ட வேண்டிய ஒரு நிலைமை ஏற்படும்.” – என்றார்.

Related Articles

Latest Articles