தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென் கிளயார் தோட்ட பிரிவில் தேயிலை தொழிற்சாலையில் ஒதுக்கப்பட்ட கழிவு தேயிலை தூளை (சொனை தூள்) தோட்ட உதவி அதிகாரியின் பங்களாவுக்கு ஏற்றி சென்ற தோட்ட லொறியை வழி மறித்த தொழிலாளர்கள், தூளை கொண்டுசெல்வதற்கு அனுமதிக்கவில்லை.
நேற்று (23) மாலையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தோட்ட உதவி அதிகாரி, உரிய அனுமதியின்றி கழிவு தேயிலையை கொண்டு சென்றுள்ளார் எனக் கூறப்படுகின்றது.

உதவி தோட்ட அதிகாரி பங்களாவில் உள்ள காணியில் தனிப்பட்ட ரீதியில் “கொம்பஸ்ட்” உர சேமிப்புக்கு இந்த கழிவு தேயிலையை கொண்டு செல்வதாக தொழிலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கழிவு தேயிலையை தோட்ட அதிகாரி கொண்டு சென்றதை தொழிலாளர்கள் ஆட்சேபித்துள்ளனர்.
“ இன்று கழிவு தேயிலையை கொண்டு செல்வார், இதனை அனுமதித்தால் நாளை நல்ல தேயிலை தூளை கொண்டு செல்ல வாய்ப்பு ஏற்படும்.” – எனவும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கழிவு தேயிலை தூளை மீண்டும் தொழிற்சாலைக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆ.ரமேஸ்.










