“நாடாளுமன்றம் வந்த ஆதிவாசிகள்” – பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவருடன் பேச்சு!

ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலே அத்தோ தலைமையில் இந்நாட்டிலுள்ள ஆதிவாசிகள் சமூகத்தின் தலைவர்கள் அடங்கிய குழுவினர் நேற்று (17) பாராளுமன்றத்துக்கு வருகை தந்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதமர் தினேஷ் குணவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் வ சஜித் பிரேமதாச ஆகியோரைச் சந்தித்தனர்.

ஊவா, கிழக்கு, வடமத்திய மற்றும் ஏனைய மாகாணங்களில் வாழும் ஆதிவாசி குழுக்களைச் சந்தித்து அவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தயாரித்துள்ள கொள்கை மற்றும் கோரிக்கைகள் சபாநாயகர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டன.

ஆதிவாசி மக்களின் இருப்பு, உரிமை, சுதந்திரம் என்பவற்றை அங்கீகரித்து அவர்களின் நல்வாழ்வைப் பாதுகாக்க சட்டங்களை இயற்றுவது காலத்தின் தேவை என ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலே அத்தோ சுட்டிக்காட்டினார்.

ஆதிவாசி மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு காலகட்டங்களில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், சட்ட பலம் இன்மையால் ஆதிவாசி மக்கள் வாழ்வாதாரத்தை மேற்கொள்வதில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்வதாக உள்ளூர் ஆதிவாசி தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.

1963ஆம் ஆண்டின் பின்னர் இந்நாட்டில் ஆதிவாசிகள் பற்றிய தரவுகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படாமை பிரச்சினைக்குரியது என்றும் அவர் இங்கு தெரிவித்தார். 1963இன் பின்னர் நடத்தப்பட்ட குடிசன மதிப்பீட்டின் போது ஆதிவாசி சமூகம் குறித்த தகவல்கள் ‘வேறு’ என்ற பிரிவின் கீழ் வகைப்படுத்தி அநீதி இழைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கு அமைய உலகின் ஏனைய நாடுகளில் ஆதிவாசி சமூகத்தினரின் உரிமைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு தனியான சட்டத்தின் ஊடாக ஏற்பாடுகள் வழங்கப்பட்டிருப்பதைப் போன்று இந்நாட்டில் உள்ள ஆதிவாசிகள் அங்கீகரிக்கப்பட்டு அவர்களின் உரிமைகளும் கிடைக்கப்பெற வேண்டும் என்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அதேபோல், ஆதிவாசி பெண்கள் எதிர்கொள்ளும் நுண்கடன் பிரச்சினைகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
ஆதிவாசி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க முழு ஆதரவை வழங்குவதாகப் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன தெரிவித்தார். ஆதிவாசி மக்கள் உள்நாட்டில் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் கௌரவ அசோக பிரியந்த அவர்களுக்குப் பிரதமர் பணிப்புரை விடுத்தார்.

Related Articles

Latest Articles