நாட்டில் தற்போது நிலவும் கொவிட்-19 தொற்றுநோய் சூழலைக் கருத்தில் கொண்டு இவ்வாரம் நாடாளுமன்ற அமர்வுகளை செப்டெம்பர் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் மாத்திரம் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாளை 21ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு நாடாளுமன்றம் கூடவிருப்பதுடன் 11 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 4.30 வரை மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல், துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் 05 கட்டளைகள், விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான 06 கட்டளைகள், வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழான 03ஒழுங்குவிதிகள், வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் கீழான கட்டளை மற்றும் இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழான ஒழுங்கிவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
இதனைத் தொடர்ந்து பிற்பகல் 4.30 மணி முதல் 4.50 மணிவரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன் 4.50 மணி முதல் 5.30 மணிவரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெறும்.
செப்டெம்பர் 22ஆம் திகதி புதன்கிழமை பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைத் (திருத்தச்) சட்டமூலம் (இரண்டாவது வாசிப்பு) மற்றும் தாவர விலங்கினப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன