நுவரெலியா கட்டுமானை மற்றும் களுகெலே ஆகிய பகுதிகளில் மூடப்பட்டிருந்த வாடகை விடுதிகளில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், கஞ்சா போதைப்பொருளும் நுவரெலியா பொலிஸ் குற்றப்பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.
நுவரெலியா பொலிஸ் குற்றப்பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய நேற்று செவ்வாய்க்கிழமை (26) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த இரண்டு விடுதியிலும் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.அத்துடன் விற்பனை செய்த இருவரையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து 50 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர் இருவரும் சகோதரர்கள் எனவும் பதுளை பகுதியை சேர்ந்த 25 மற்றும் 32 வயதான நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா பிரதான நகருக்கு அருகில் இரு முக்கிய இடங்களில் வாடகைக்கு விடுதிகளை பெற்று தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்யப்பட்டதாகவும் , விடுதிக்கு அருகில் உள்ளவர்களுக்கு சந்தேகம் ஏற்படாதவாறு வாரத்தில் இரண்டு , அல்லது மூன்று நாட்களுக்கு மாத்திரம் கழிவு விலையில் அறைகளை வாடகைக்கு வழங்குவதாகவும் ஏனைய நாட்களில் பிரதானமாக கஞ்சாவை விற்பனை செய்து வந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் கைப்பற்றப்பட்ட கஞ்சா போதைப்பொருட்களுடன் அவர்களை இன்று புதன்கிழமை (26) நுவரெலியா நீதிமன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் குறித்த சகோதரர்களுக்கு கஞ்சா போதைப் பொருள் கிடைக்கும் வழிகள் மற்றும் இவர்களது விநியோக வலையமைப்பு குறித்து நுவரெலியா பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
நானுஓயா நிருபர்
