நுவரெலியா மாவட்டத்தின் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருவதால் பல இடங்களில் வீதி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாகக் இன்று பிற்பகல் பெய்த கடுமையான மழைக்காரணமாக நுவரெலியா கந்தப்பளை பிரதேசத்தில் பல இடங்களில் வெள்ள அனர்த்த நிலை உருவாகியுள்ளதுடன் கோர்ட்லோட்ஜ் சந்தி மற்றும் புதிய வீதி தொகுதியில் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் சில குடியிருப்புக்களிலும் வெள்ளம் புகுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

சில பிரதான வீதி பகுதிகளில் முற்றாக வெள்ளம் சூழ்ந்துள்ளதனால் வீதி அருகில் உள்ள வடிகான்களை அவதானிக்க முடியாத நிலையில் மக்கள் விபத்தினை எதிர்கொள்ளும் நிலையும் உருவாகியுள்ளது , கந்தபளை பிரதேசத்தில் அதிகமான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வர்த்தக நிலையங்களில் வெள்ள நீர் புகுந்ததால் வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாகக் வாகனச் சாரதிகள் பனி மூட்டம் மற்றும் மழையுடனான காலநிலை நிலவும் போது தமது வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்தவாறு பயன்படுத்துவதன் மூலம் விபத்துகளை தவிர்த்துக் கொள்ளலாம் என நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
