நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக, மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியான கனமழை பெய்து வருகிறது.
இதன் விளைவாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதுடன், பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு 31 ம் திகதி தொடர் மழையால் விமலசுரேந்திர மற்றும் கெனியோன் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வடைந்துர் வான் கதவுகள் திறக்க திறக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, லக்ஸபான நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் வான் பாயும் அளவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் மழை பெய்து வருவதால், எந்த நேரத்திலும் அந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்படக்கூடிய நிலை உருவாகியுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன் காரணமாக, நீர்த்தேக்கங்களுக்கு கீழ்ப்பகுதிகளில் வாழும் மக்கள் ஆறுகள் மற்றும் நீரோடைக்களுக்கு அண்மையில் செல்வதைத் தவிர்க்குமாறும், வெள்ள அபாயம் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அனர்த்த முகாமைத்துவ மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.
இதற்கிடையில், மாவட்டத்தின் பல பகுதிகளில் வீசிய கடும் காற்று காரணமாக மரங்கள் மற்றும் கிளைகள் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்துள்ளதால் பல இடங்களில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது.
இதனால் வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் அன்றாட சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் சிரமத்துக்குள்ளாகியுள்ளது.
மறுபுறம், தொடர்ச்சியான மழை காரணமாக பெருந்தோட்டப் பகுதிகளில் தேயிலை பறிப்பு பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
தொழிலாளர்கள் வழமையான முறையில் பணிகளை மேற்கொள்ள முடியாததால், தேயிலை உற்பத்தியில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தோட்ட நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, மழையுடன் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக நுவரெலியா மாவட்டத்தின் பல பிரதான வீதிகளில் வாகனப் போக்குவரத்தும் சிரமமான நிலையைக் கண்டுள்ளது.
குறிப்பாக, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கலகல, பிட்டவல, கினிகத்தேனை, தியகல, வட்டவளை மற்றும் ஹட்டன் பகுதிகளிலும், ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் குடாகம, கொட்டகலை, சென்கிளையார், தலவாக்கலை, ரதல்ல மற்றும் நானுஓயா பகுதிகளிலும் அடிக்கடி கடும் பனிமூட்டம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் சாரதிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு, வேகக் கட்டுப்பாட்டுடன் பயணிக்குமாறும், வாகனங்களுக்கு இடையில் போதிய இடைவெளியைப் பேணுமாறும், முந்திச் செல்லும் நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், மலைச்சரிவு அபாயம் காணப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிக அவதானத்துடன் இருக்குமாறும், அவசர நிலை ஏற்பட்டால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலை இன்னும் சில நாட்கள் நீடிக்கக்கூடும் என வானிலை முன்னறிவிப்புகள் தெரிவிப்பதால், பொதுமக்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து கவனத்தில் கொண்டு தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து பாதுகாப்புடன் செயல்படுமாறு மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.










