நுவரெலியா விடுதிக்கு அழைத்துவந்த ஆணுக்கு மயக்க மருந்து கொடுத்து நகைகளை களவாடிய பெண் கைது!

புத்தாண்டை கொண்டாடுவதற்காக கொழும்பிலிருந்து நுவரெலியாவுக்கு அழைத்துவந்த நபருக்கு மயக்க மருந்தை கொடுத்து பல லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள், மற்றும் விலைவுயர்ந்த தொலைபேசிகள் இரண்டு என்பவற்றை திருடி கொண்டு மாயமாகியிருந்த பெண்ணை நுவரெலியா குற்ற தடுப்பு விசாரணை பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொழும்பு மாலபே பகுதியில் வைத்து குறித்த சந்தேக நபரான பெண்ணை நுவரெலியா குற்றத்தடுப்பு பொலிஸார் கடந்த (26) அன்று கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் விசாரணையை மேற்கொண்டிருந்த நுவரெலியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் , அப் பெண் நுவரெலியாவில் வைத்து ஆண் ஒருவரை மயக்கி – திருடி சென்றிருந்த 32 லட்சத்திற்கு அதிகமான பெறுமதியான தங்க நகைகளையும்,ஸ்மார்ட் செல் போன் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட தங்க நகைகள் மற்றும் விலையுயர்ந்த ஸ்மார்ட் செல் போன் ஆகியவற்றுடன் மாலபே பகுதியிலிருந்து நுவரெலியாவுக்கு அழைத்து வரப்பட்ட பெண் மீது வழக்கு பதிந்த நுவரெலியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் இப் பெண்ணை (28.02.2024) மாலை நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி பிரபுதிகா லங்கான்தினி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

இதன் போது வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதவான் சந்தேக நபரான பெண்ணை மார்ச் மாதம் 11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மாலெபே பிரதேசத்தை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் கொழும்பை சேர்ந்த செல்வந்த நபருடன் நட்பை ஏற்படுத்தி அவரை 2024 புது வருட சந்தோஷத்தை நுவரெலியாவில் அனுபவிக்க (31.12.2023 ) அழைத்து வந்துள்ளார். இவ்வாறு நுவரெலியாவுக்கு வந்தவர்கள் விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர்.

இதன் போது குறித்த பெண் அழைத்து வந்திருந்த நபருக்கு உணவு மற்றும் மதுபானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்துள்ளார். பின் மயக்கத்திற்கு சென்ற நபரிடமிருந்து 32 லட்சத்திற்கு அதிகமான பெறுமதியான கொண்ட தங்க நகைகள் மற்றும் விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள் இரண்டை சுருட்டிக்கொண்டு இப் பெண் விடுதியிலிருந்து தலை மறைவாகியுள்ளார்.

மறுநாள் அதாவது புது வருடம் பிறப்பன்று மயக்கத்திலிருந்து தெளிந்தவர் பெண்ணையும், அத்துடன் தனது பொருட்களையும் தேடியுள்ளார் அங்கு எதுவும் இல்லை. அனைத்தையும் இழந்துவிட்ட இவர் நுவரெலியா பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாட்டை செய்துள்ளார்.

இவ்வாறு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய குறித்த பெண்ணின் தொலை பேசி இலக்கத்தை ஆதாரமாக கொண்டு நுவரெலியா பொலிஸ் தலமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரேமலால் ஹட்டியாராச்சியின் பணிப்பின் பேரில்,குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி இந்துநில் பிரேமலால் ஆகியோர் தலைமையில் நியமிக்கப்பட்ட பொலிஸ் குழுவினர் மாலபே பகுதிக்கு சென்று இப் பெண்ணை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆ.ரமேஸ்.

Related Articles

Latest Articles