பட்டலந்த ஆணைக்குழு விசாரணை அறிக்கை தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக ஜனாதிபதியால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பியகம பட்டலந்த வீடமைப்பு திட்டத்தில் உள்ள வீடுகளுக்குள் சட்டவிரோதமான முறையில் இளைஞர்களை தடுத்துவைத்து சித்திரவதைக்கு உட்படுத்தி கொலை செய்தமை, காணாமலாக்கியமை தொடர்பில் விசாரணை நடத்தி பொறுப்புக்கூற வேண்டியவர்களை அடையாளம் காண்பதற்காக 1995 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்காவால், ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டது.
1998 மார்ச் 26 ஆம் திகதி மேற்படி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிலையில் பட்டலந்த அறிக்கை எனப்படும் குறித்த அறிக்கையை சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க சபையில் நேற்று முன்வைத்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர் கூறியவை வருமாறு,
‘ பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் கொள்கை அளவில் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய குறித்த அறிக்கையை சட்டமா அதிபரிடம் கையளிப்பதற்கும், மேற்படி அறிக்கை தொடர்பில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குரிய ஆலோசனைகளை முன்வைப்பதற்கு ஜனாதிபதியால் விசேட குழுவொன்றை நியமிப்பதற்கும் எதிர்பார்க்கின்றோம்.
அதேபோல பொருத்தமான நாளில் பட்டலந்த அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரு நாள்கள் விவாதம் நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளோம்.
மும்மொழிகளிலும் உள்ள அறிக்கைகளை கையளிக்கின்றேன். சாட்சிகள் அடங்கிய இணைப்புகள் விரைவில் சபையில் முன்வைக்கப்படும்.” – என்றார்.