பதுளை மாவட்டத்துக்கு முதற்கட்டமாகக் கிடைத்துள்ள 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகளை, அம்மாவட்ட மக்களுக்கு, நாளை (09) முதல் ஏற்றும் பணிகள் முன்னெடு்க்கப்படவுள்ளன.
அந்த வகையில், ஹப்புத்தளை, எல்ல, பண்டாரவெல போன்ற பிரேதேசங்களில், நாளைய தினம் தடுப்பூசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று, பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
செந்தில் தொண்டமானின் அறிவுறுத்தல்களுக்கமைய, தோட்டப் புறங்களுக்குள்ளேயே தடுப்பூசி ஏற்றும் நிலையங்கள் உருவாக்கப்பட்டு, மிகவும் பாதுகாப்பான முறையில் இந்தத் தடுப்பூசி ஏற்றல் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று தெரிவித்த சுகாதாரத் துறையினர், பதுளை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் அதிகரித்துள்ள தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு, முன்னுரிமை அடிப்படையில் இந்தத் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன என்றும் குறிப்பிட்டனர்.
