தமது ஆட்சிக்கு மக்கள் ஆணை உள்ளது எனவும், அது தொடரவேண்டும் என்பதே மக்களின் நிலைப்பாடு என்பதையும் வெளிப்படுத்துவதற்காக உள்ளுராட்சிசபைத் தேர்தலிலும் வெற்றிபெற வேண்டும் என்பதில் ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி தீவிரம் காட்டிவருகின்றது.
கட்சி தலைவர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பிரதான பிரச்சாரக் கூட்டங்களில் நேரில் களமிறக்கி வாக்கு வேட்டைக்குரிய பரப்புரைகளில் ஈடுபட்டார். குறிப்பாக வடக்குக்கு தேசிய மக்கள் சக்தி பிரமுகர்கள் படையெடுத்து வந்திருந்தனர். பொதுத்தேர்தலின்போது வடக்கில் இருந்து கிடைக்கப்பெற்ற ஆதரவை தக்க வைத்துக்கொள்வதில் அநுர அரசாங்கம் கூடுதல் அக்கறை செலுத்துவதை காணமுடிகின்றது.
அதேவேளை தற்போதைய அரசாங்கம் பொய்கூறியே ஆட்சிக்கு வந்ததாகவும், வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதையும் மையப்படுத்தி பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பிரச்சாரம் முன்னெடுத்துவருகின்றது.
தமது கட்சியால்தான் இந்நாட்டை நிர்வகிக்க முடியும் எனவும், அடுத்த தேசிய மட்டத்திலான தேர்தலுக்குரிய ஒத்திகையாகவும் இத்தேர்தலை ஐக்கிய மக்கள் சக்தி கருதுகின்றது. சஜித்தின் தலைமைத்துவத்தின் ஆயுளையும் இத்தேர்தல் முடிவுகளே நிர்ணயிக்கவுள்ளன.
அத்துடன், போர் வெற்றி, இராணுவம் உட்பட பழைய புராணங்களை பாடி, தேசியவாத உணர்வைத் தூண்டி வாக்கு வேட்டை நடத்துவதற்குரிய பிரச்சாரத்திலேயே மொட்டு கட்சி ஈடுபட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.