‘பென்டோரா ஆவணம்’ – சர்வதேச விசாரணையை கோருகிறார் சஜித்

பென்டோரா மோசடிக்காரர்களைக் கண்டுபிடிக்க சர்வதேச மட்டத்திலான விசாரணையை நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

முறையற்ற நிதி சேகரிப்பு , வரி செலுத்தாமை, பணச் சலவை உட்பட இரகசிய நிதிக் கொடுக்கல் வாங்கல் பற்றிய தகவல்களை வெளிப்படுத்தும் பென்டோரா ஆவணத்தின் ஊடாக தகவல்கள் வெளியே வந்தவண்ணம் உள்ளதாகவும், இலங்கையின் பெயரும் இதில் தொடர்புபட்டுள்ளதாகவும், இந்த விவகாரம் குறித்து உடனடியாக சர்வதேச மட்டத்திலான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பென்டோரா ஆவணத்தின் ஊடாக வெளிப்படுத்தப்பட்ட சொத்துக்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகளுக்கு பல நாட்டுத் தலைவர்கள் பதிலளித்துள்ளனர். பாகிஸ்தான் இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளது. உடனடியாக விசாரணையை நடத்தி குற்றவாளிகளுக்கு முறையான தண்டனையை வழங்குவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இன்னும் பல நாடுகள் அவ்வாறு தெரிவித்துள்ளன.

நாடு தற்பொழுது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளுவதற்கு வரிசையாக நின்றுகொண்டு அவதிப்படும் பொதுமக்களை நாடுபூராவும் காணக்கூடியதாக உள்ளது. இரண்டு ஆண்டுகளாக கல்வித்துறை வீழ்ச்சியடைந்துள்ளதுடன் ஆசிரியர்கள் ஒரு வருடத்துக்கும் மேற்பட்ட காலம் அவர்களது தொழில்சார் உரிமைகளுக்காக போராடுகின்றனர்.

கொரோனா பேரழிவு காரணத்தால் பதின்மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் மரணித்துள்ளதுடன் மருந்து மாபியா காரணத்தால் மேலும் பல்வேறுபட்ட நோயாளர்கள் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே போராடிக் கொண்டிருக்கின்றனர். விவசாயிகள் உட்பட அனைத்துத் தரப்பினரும் படுமோசமான நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். என்பதுடன் நாட்டின் மொத்தப் பொருளாதாரமும் வங்குரோத்து நிலைமையிலேயே உள்ளது.

இப்படியான சந்தர்ப்பத்தில் பென்டோரா ஊடாக பாரிய மோசடி பற்றிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.எனவே இந்த பாரிய மோசடியின் உண்மைத்தன்மையை நாடு அறிந்து கொள்ள வேண்டும் என நாங்கள் அரசாங்கத்திடம் கூறுகின்றோம்.

வங்குரோத்து சேறு பூசும் நடவடிக்கைகள் மற்றும் சில்லறை அரசியல் பேச்சுக்களை விடுத்து இதன் உண்மையை வெளிப்படுத்தவும்.

எனவே, பென்டோரா மோசடிக்காரர்களை கண்டுபிடிக்கும் உண்மையான பக்கச்சார்பில்லாத, வெளித்தெரியும் வண்ணம் சர்வதேச மட்டத்திலான ஏற்றுக் கொள்ளப்பட்ட துரித விசாரணையொன்று நடத்தப்படல் வேண்டும்.

Related Articles

Latest Articles