பேராதனை பல்லகையில் அரச சொத்துக்கள்மனிதவளங்கள் துஷ்பிரயோகம் : மூவர் சிக்கினர்

நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பதில் பதிவாளர் உட்பட பொறுப்பு வாய்ந்த மூவர் அரச சொத்துக்களையும், மனித வளங்களையும் துஷ்பிரயோகம் செய்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை பேராதனை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றிய உபுல் திசாநாயக்க, பல்கலைக்கழக நிர்வாகத்துறையினர், மற்றும் கணக்காய்வினை மேற்கொள்வதற்காக வருகை தந்திருந்த குழுவினர் ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பேராதனை பல்கழலைக்கழகம் டய்ம்ஸ் உயர் கல்வி தரப்படுத்தலில் உலகின் அதி சிறந்த 500 பல்கலைக்கழகங்களில் தொடர்ந்தும் மூன்றாவது முறையாக தெரிவு செய்யப்பட்ட ஒரு குறுகிய காலப்பகுதியில் இந்த பல்கலைக்கழகத்தின் பல துஸ்பிரயோகம் நிதி மோசடி தொடர்பாக தகவல்கள் வெளிவந்துள்ளமை பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கும் அதன் கௌரவத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளதென பல்கலைக்கழகத்தின் பெயர் குறிப்பிட விரும்பாத பேராசிரியர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழகம் என்பது மிகவும் கௌரவமான கல்வி கற்ற சமூகம் பிரசன்னமாகவிருக்கும் இடமாகவே பொதுமக்களால் பார்க்கப்படுகின்றது. அங்கே ஊழல்கள் நடைபெறாது என்ற நம்பிக்கையும் பொதுமக்களுக்கு அதிகமுண்டு. நாட்டில் நடக்கின்ற பல ஊழல்களுக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்கள். எனவே பல்கலைக்கழகம் என்பது புனிதமான கல்வித்தளமாகவே பார்க்கப்படுகின்றது.

ஆனால் அங்கேயும் ஊழல்கள் நிறைந்து காணப்படுகின்றன. கற்றறிந்த சமூகமே ஊழல்களுடன் தொடர்புபட்டிருப்பது கவலைக்குரியதாகின்றது. சட்ட நுணுக்கங்கள் தெரிந்தவர்கள் இவ்விதமான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

அரசாங்க உத்தியோகத்தர்களாக நியமனம் பெறுகின்றவர்கள் நாட்டின் சட்டங்களுக்கு அமைய தங்களுடைய நாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்தாத வண்ணமும் தன்னுடைய தொழிலுக்கு பங்கம் ஏற்படாத வகையிலும் நிறுவனத்தின் முன்னேற்றத்திற்காகவும் பொது மக்களின் நலனை முன்னிறுத்தி நேர்மையாகவும் தீவின் எந்த பகுதியிலும் சென்று தங்களுடைய கடமையை முன்னெடுப்போம் என்று சத்தியபிரமானம் செய்து கொண்டே அரசாங்க பதவிகளுக்கு நியமிக்கப்படுகின்றார்கள். இது அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் உத்தியோகத்தர்களுக்கும் பொருத்தமானதாகும்.

பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பதவி என்பது மிகவும் பொறுப்புவாய்ந்த ஒரு பதவியாகும். பல்கலைக்கழகத்தின் அனைத்து சொத்துக்களுக்கும் பொறுப்பாளராகவும் அந்த சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் அவருடையது.பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருவருடைய பொறுப்பைவிட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொரு பொறுப்பாக பதிவாளரை குறிப்பிட முடியும்.

துணைவேந்தர் ஒருவர் நியமனம் பெறுவது மூன்று வருடங்களுக்கு மாத்திரமே. அவர் மேலும் மூன்று வருடங்களுக்கு தொடர்ந்து தனது துணை வேந்தர் பதவியை தொடர வேண்டுமானால் அதற்கு பல்கலைக்கழகத்தின் நிர்வாக சபையின் அனுமதியும் (பல்கலைக்கழகத்தின் கவுன்சில்) ஜனாதிபதியின் சம்மதமும் இருக்க வேண்டும். அப்படி இரண்டு தரப்பினரும் சம்மதித்தால் மாத்திரமே அவர் தன்னுடைய துணைவேந்தர் பதவியை மேலும் மூன்று வருடங்களுக்கு தொடர முடியும். இல்லாவிட்டால் அவர் அந்தப் பதவியில் இருந்து மூன்று வருடங்களில் நிறைவு செய்ய வேண்டும். அவர் தற்காலிகமாக நியமிக்கப்படுகின்ற ஒருவராகவே கருத முடியும் என்ற விடயத்தை துணை வேந்தர் எம்.டி.லமாவன்ச குறிப்பிடுகின்றார்.

பேராதனை பழ்கலைக்கழகத்தில் இருந்து பதில் பதிவாளர் உட்பட மூவர் அரச சேவையில் இருந்து வெளியேற்றி அவர்களுடைய பதவிகளை நிறைவிற்கு கொண்டு வந்துள்ளதாக பல்கலைக்கழகத்தின் நிர்வாக சபை தெரிவிக்கின்றது.

அரசாங்க சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்த காரணத்தால் பேராதனை பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் ராஜபக்ச உட்பட 3 பேருக்கு எதிராக பல்கலைக்கழகத்தின் நிர்வாக சபை (பல்கலைக்கழகத்தின் கவுன்சில்) அவர்களுடைய பதவியில் இருந்தும் அரசாங்க சேவைகளில் இருந்தும் வெளியேற்றியுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் எம்.டி.லமாவன்ச தெரிவித்தார்.

இவர்கள் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதை பல்கலைக்கழகத்தின் நிர்வாக சபை (பல்கலைக்கழகத்தின் கவுன்சில்) உறுதிப்படுத்தியுள்ளது.

பல்கலைக்கழக நிர்வாக சபையில் (பல்கலைக்கழகத்தின் கவுன்சில்) 27 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றார்கள்.பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊடாக 14 பேரும் பல்கலைக்கழகத்தில் இருக்கின்ற 9 பீடத்திற்கான பீடாதிபதிகளும் பல்கலைக்கழக செனட் கூட்டத்தின் மூலமாக இருவரும் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மற்றும் வேந்தர் ஆகிய அனைவருடைய மொத்தமே இந்த 27 நபர்கள் என்பதாகும். இந்த நபர்களே பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை கொண்டு செல்கின்றவர்கள்.

இந்த குற்றச்சாட்டிற்கு ஆளான பதில் பதிவாளருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட விடயம் நாட்டில் கொரோனா காலத்தில் பேராதெனிய ரிக்காட்டன் பகுதியில் அமைந்துள்ள பதிவாளருக்கு சொந்தமான வீட்டில் பல்கலைக்கழகத்தில் வேலைப்பிரிவில் தொழில் புரிகின்ற மூன்று நபர்களை தனது சொந்த வீட்டு வேலைகளுக்காக பயன்படுத்தினார் என்ற குற்றச் சாட்டே முன்வைக்கப்பட்டதாக இதனை விசாரணை செய்த பல்கலைக்கழக நிர்வாக சபையினர் (பல்கலைக்கழகத்தின் கவுன்சில்) தெரிவிக்கின்றார்கள்.

குறித்த விசாரணையின் பொழுது வேலைப்பகுதியில் பாவிக்கப்படுகின்ற கிரைன்டர் உட்பட பல பொருட்களையும் இதன்போது பாவித்திருப்பதுடன் மூன்று நபர்களும் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த விடயங்களை கொழும்பில் இருந்து வருகை தந்த கணக்காய்வு பிரிவினர் நேரடியாக பார்வையிட்டுள்ளதுடன் இது தொடர்பான தகவலை ஏற்கனவே உயர் பதிவியில் இருந்து வெளியேற்றப்பட்ட நபர் ஒருவரே கொழும்பு கணக்காய்வு பிரிவினருக்கு வழங்கி இருக்கின்றார் என்பதை பல்கலைக்கழகத்தின் தகவல்கள் மூலம் தெரியவருகின்றது.

மூன்று நபர்களும் பதில் பதிவாளருடைய வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த பொழுது கொழும்பில் இருந்து கணக்காய்வு செய்வதற்காக வருகை தந்திருந்த குழுவினர் விடயத்தை கேட்ட பொழுது தன்னுடைய வீட்டின் திருத்த பணிகளை ஒரு ஒப்பந்த காரருக்கு வழங்கியிருந்ததாகவும் அவர்கள் மூலமாகவே குறித்த மூன்று நபர்களும் இங்கு வேலைக்காக அமர்த்தப்பட்டிருப்பதாகவும் இதற்கும் தனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்ற விடயத்தையே பதில் பதிவாளர் ராஜபக்ச கணக்காய்வை மேற்கொண்ட குழுவினருக்கு தெரிவித்திருக்கின்றார்.

இந்த விசாரணை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட நிலையில் பதில் பதிவாளரை கட்டாய விடுமுறையில் அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதன்போது பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக கடமைபுரிந்தவர் பேராசிரியர் உபுல் திசாநாயக்க என்பவரே அவர் இந்த வியடத்தை உறுதிப்படுத்தினார்.

அதேநேரம் குறித்த மூன்று நபர்களும் பல்கலைக்கழகத்தில் வேலைக்கு சமூகமளித்திருந்த நிலையில் அவர்களுக்கான வேலைகளை முறையாக வழங்காமல் அவர்களை பதில் பதிவாளர் வீட்டின் வேலைகளுக்கு அனுப்பி வைத்தமை தொடர்பாக வேலைப்பகுதி பொறியியலாளர் மற்றும் வேலைப்பகுதியின் அதிகாரி ஒருவருக்கும் குற்றச் சாட்டு முன்வைக்கப்பட்டதாக பல்கலைக்கழக நிர்வாக சபையினர் தெரிவிக்கின்றனர். இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (பல்கலைக்கழகத்தின் கவுன்சில்)

குறித்த விசாரணையை இரண்டு அல்லது மூன்று கூட்டங்களில் முடிவிற்கு கொண்டுவர வேண்டிய நிலையில் இந்த தீர்ப்பு வழங்குவதற்கு காலம் தாழ்த்தப்பட்ட நிலையில் புதிய துணை வேந்தராக பேராசிரியர் எம்.டி.லமாவன்ச நியமிக்கப்பட்டார்.

அவர் குறித்த விசாரணை தொடர்பாக பதில் பதிவாளர் மற்றும் வேலைப்பகுதியின் பொறியியலாளர் இருவரும் தகுதிகான் காலத்தில் சேவையில் ஈடுபட்டுள்ள நிலையை கருத்தில் கொண்டும்; வேலைப்பகுதி அதிகாரியினதும் ஏனைய இருவருடைய அரச சேவையையும் மொத்தமாக மூவரையும் வெளியேற்றுவதாக அறிவித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

இது தொடர்பாக பதில் பதிவாளர் ராஜபக்சவிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது தனது அரச சேவை முடிவுறுத்தப்பட்டிருப்பதால் தான் இது தொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என குறிப்பட்டார். மேலும் ஏனைய இருவருடைய கருத்துக்களை பெற்றுக் கொள்ள முயற்சிக்கப்பட்ட பொழுதும் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.

 

Related Articles

Latest Articles