பொகவந்தலாவை, தபால் நிலைய உத்தியோகஸ்தர்கள் இன்று காலை முதல் தபால் விநியோகத்தில் ஈடுபடாது, பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பொகவந்தலாவ பகுதிக்கான தபால் சேவை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பொகவந்தலாவ தபால் நிலைய தபால் அதிபருக்கும், அங்கு பணிபுரியும் உத்தியோகஸ்தர்களுக்கும் இடையில் இன்று வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது தபால் நிலைய அதிபர், தம்மை தாக்க முற்பட்டார் என உத்தியோகஸ்தர்கள் குற்றஞ் சாட்டினர். அத்துடன், தபால் நிலைய அதிபருக்கெதிராக பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பில் நுவரெலியா மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதோடு தமக்கான உரிய தீர்வு கிடைக்கும் வரை பணி பகிஷ்கரிப்பை கைவிட போவதில்லையென பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட உத்தியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவ தபால் நிலைய அதிபரிடம் தொடர்பு கொண்டு வினவியபோது குறித்த நிலையத்தில் பணி புரியும் உத்தியோகஸ்தர்கள் தன்னை தாக்க வந்ததாகவும் தனது பாதுகாப்பினை கருத்திற் கொண்டு பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.
பொகவந்தலாவ நிருபர் சதீஸ்










