அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் விதிக்கும் பொருளாதாரத் தடைகள் மற்றும் அழுத்தங்களால், வடகொரியாவின் அணு ஆயுத நாடு என்ற அந்தஸ்தை மாற்ற முடியாது என வடகொரியா தெரிவித்துள்ளது.
வடகொரியாவுக்கு எதிரான தடைகளை அமுல்படுத்துவதைக் கண்காணிக்கும் நாடுகளின் கூட்டறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வடகொரிய வெளிவிவகார அமைச்சின் பெயர் குறிப்பிடப்படாத பேச்சாளர் ஒருவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளதாக அந்நாட்டின் அரச ஊடகமான KCNA தெரிவித்துள்ளது.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரித்தானியா மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய குழுவொன்று இந்த வாரம் வெளியிட்ட கூட்டறிக்கையில், வடகொரியாவுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் தடைகளை அனைத்து உறுப்பு நாடுகளும் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்தது.
குறிப்பாக, வடகொரியத் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்துவதற்கும், வடகொரியாவுடன் இராணுவ ஒத்துழைப்பில் ஈடுபடுவதற்கும் விதிக்கப்பட்டுள்ள தடைகளை முழுமையாக அமுல்படுத்துமாறு அந்தக் கூட்டறிக்கையில் கோரப்பட்டிருந்தது.
இதற்குப் பதிலளித்த வடகொரிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், பலவீனமான நாடுகளிடம் பொருளாதாரத் தடைகளும் அழுத்தங்களும் பலனளிக்கலாம். ஆனால், வடகொரியாவிடம் அவை ஒருபோதும் பலனளிக்காது எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகள் வழக்கமாக முன்னெடுக்கும் தடைகள் தொடர்பான நடவடிக்கைகள், அணு ஆயுத நாடு என்ற வடகொரியாவின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவின் இறையாண்மையை மீறும் விரோத நடவடிக்கையாகவே குறித்த கூட்டறிக்கையைத் தமது நாடு கருதுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதற்கிடையில், வடகொரியாவின் அணு ஆயுத மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டங்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், 2006ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.










