களிமண் பொம்மைகளில் ஊசிகளைக் குத்தி போராட்டம் நடத்துவது உள்ளிட்ட விசித்திரமான போராட்ட முறைகளைக் கையாளும் சில எதிர்க்கட்சிக் குழுக்களின் மனநிலை குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
தேசிய புத்திஜீவிகள்அமைப்பின் (NIO) தேசிய மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி, முந்தைய அரசியல் கலாசாரத்தின் மூலம் நன்மையடைந்த சில குழுக்கள், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் திணறுவதாகத் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் அரசியல் மறுசீரமைப்புகளுக்குப் பதிலளிக்கும் வகையில், இக்குழுக்கள் வெறுப்பூட்டும் கருத்துகள், பொய்யான குற்றச்சாட்டுகள் மற்றும் வழக்கத்திற்கு மாறான போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
களிமண் பொம்மைகளில் ஊசிகளைக் குத்தும் நடைமுறையைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவ்வாறு செய்வதன் மூலம் மற்றொரு நபருக்கு வலியை ஏற்படுத்த முடியும் என ஒருவர் எவ்வாறு நம்ப முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.
இத்தகைய நடவடிக்கைகள் நாட்டில் இடம்பெற்று வரும் அரசியல் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாத சில தரப்பினரின் மனநிலையையே வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தெளிவான நோக்கங்களுடன் முன்னெடுக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் இயக்கங்களும் போராட்டங்களும் நாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாது எனக் குறிப்பிட்ட அவர், ஆனால் தெளிவான இலக்குகளின்றி செயற்படும் ஒழுங்கற்ற குழுக்கள் சமூக அமைதியின்மையை ஏற்படுத்தக்கூடும் என எச்சரித்தார்.
எனவே, எதிர்க்கட்சிகள் தெளிவான அரசியல் நோக்கத்துடனும் ஒழுங்கமைக்கப்பட்ட வகையிலும் தமது போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் பௌத்த பிக்குகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் குழுவொன்று அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது.
ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் ஆரம்பமான இந்தப் போராட்டத்தில் மத வழிபாடுகள் மற்றும் சடங்கு நடவடிக்கைகளும் இடம்பெற்றிருந்தன. இதன்போது, ஜனாதிபதிக்கு எதிரான சாபச் சடங்குகளில் களிமண் பொம்மைகள் பயன்படுத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
…….
……………
அடக்குமுறைச் சட்டங்கள் மூலம் ஆட்சியைத் தக்கவைக்க அரசாங்கம் முயற்சி – சஜித்

அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் தோல்வியடைந்துள்ள அரசாங்கம், தனது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக மக்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் இரண்டு அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவர முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் சட்டம் ஆகியவற்றின் ஊடாக, கருத்துச் சுதந்திரம், ஒன்றுகூடும் உரிமை உள்ளிட்ட ஜனநாயக உரிமைகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை, மெதிரிகிரிய பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், புதிய சட்டங்கள் மூலம் நிறைவேற்று அதிகாரத்துக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்படுவதுடன், சாதாரண செயற்பாடுகள்கூட குற்றங்களாகக் கருதப்படும் அபாயம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் தொடர்பான தேர்தல் வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை எனக் குற்றஞ்சாட்டிய அவர், விவசாயிகளுக்கு நெல்லுக்கான உத்தரவாத விலையை வழங்குவதிலும் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
அத்துடன், பௌத்த மதத்துக்கும் ஏனைய மதங்களுக்கும் உரிய மரியாதையையும் பாதுகாப்பையும் வழங்கும் வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
………..
கொழும்பில் பிரபல பிரெஞ்சு இசைக் கலைஞர் DJ ஸ்நேக்கைச் சந்தித்தார் விஜித ஹேரத்

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், சர்வதேசப் புகழ்பெற்ற பிரெஞ்சு இசைக் கலைஞரும் இசைத் தயாரிப்பாளருமான டிஜே ஸ்நேக்கை கொழும்பில் நேற்று (31) சந்தித்துள்ளார்.
கொழும்பு துறைமுக நகரில் இரண்டு நாட்களாக நடைபெறும் Senter இசைத் திருவிழாவில் பங்கேற்பதற்காக இலங்கை வந்துள்ள டிஜே ஸ்நேக்குடன் அமைச்சர் இந்தச் சந்திப்பை நடத்தியுள்ளார்.
இதன்போது, இலங்கையில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியதற்கும், நாட்டின் வளர்ந்து வரும் பொழுதுபோக்குத் துறைக்குப் பங்களிப்பு வழங்கியதற்கும் டிஜே ஸ்நேக் உள்ளிட்ட சர்வதேசக் கலைஞர்களுக்கு அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையின் இயற்கை அழகு, கலாசாரப் பாரம்பரியம் மற்றும் விருந்தோம்பலை அனுபவிப்பதற்காக மீண்டும் விடுமுறையைக் கழிக்க இலங்கை வருமாறும் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சர்வதேச இசைத் திருவிழாக்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு சுற்றுலாத்துறையின் ஊடாக இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
சர்வதேச பொழுதுபோக்கு நிகழ்வுகள் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான முன்னணி பிராந்தியத் தலமாக இலங்கையை நிலைநிறுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும், இசை, பொழுதுபோக்கு மற்றும் கலாசார நடவடிக்கைகள் ஊடாக இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நிகழ்வுகளை இலங்கையில் அதிகளவில் நடத்துவதன் மூலம் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கவும், உலகளாவிய ரீதியில் நாட்டின் அடையாளத்தை மேம்படுத்தவும், புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கவும் முடியும் என அரசாங்கம் நம்புவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
…………
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் அன்டிகுவா பயணம்

2026ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் (CHOGM) பங்கேற்பதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (31) இலங்கையிலிருந்து அன்டிகுவா மற்றும் பார்புடாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அன்டிகுவா மற்றும் பார்புடாவின் தலைநகரான சென். ஜான்ஸில் இந்த மாநாடு நடைபெறவுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் 31ஆம் திகதி முதல் நவம்பர் 6ஆம் திகதி வரை அங்கு தங்கியிருக்கும் பிரதமர், பொதுநலவாய நாடுகளின் தலைவர்களைச் சந்திப்பதுடன், உறுப்பு நாடுகளுக்கு இடையிலான பொதுவான நலன் சார்ந்த விடயங்கள் குறித்த கலந்துரையாடல்களிலும் பங்கேற்கவுள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பிரதமர் நாட்டை விட்டுப் புறப்பட்டுச் சென்றதாக பிரதமர் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
………..
நாளை பல பகுதிகளில் அதிகரிக்கும் வெப்பம்!

இலங்கையின் பல பகுதிகளில் நாளை (நவம்பர் 01) வெப்பமான காலநிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இயற்கை அனர்த்தங்கள் தொடர்பான முன்னெச்சரிக்கை நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் வெப்பச் சுட்டெண் ‘அவதானம்’ செலுத்த வேண்டிய மட்டத்தை அடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று சனிக்கிழமை (31) மாலை 4 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பின்படி, பகல் வேளைகளில் இவ்வாறான அதிகரித்த வெப்பநிலை உணரப்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், நீண்ட நேரம் வெயிலில் இருப்பதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும், போதியளவு நீர் அருந்துமாறும், நிழலான இடங்களில் ஓய்வெடுக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், நாளின் அதிக வெப்பம் நிலவும் நேரங்களில் கடினமான வெளிப்புறச் செயற்பாடுகளை மட்டுப்படுத்திக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
காற்றின் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் ஆகிய இரண்டும் இணைந்து மனித உடலுக்கு உணரப்படும் வெப்பத்தின் அளவே வெப்பச் சுட்டெண் எனப்படுகின்றது.
இந்த எச்சரிக்கை 2026 நவம்பர் முதலாம் திகதி வரை செல்லுபடியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
………….
திலீபனின் நினைவுத் தூபியிலுள்ள தற்காலிகக் கட்டுமானத்தை
உடனடியாக அகற்றுங்கள்

யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவுத் தூபியிலுள்ள தற்காலிகக் கட்டுமானங்களை உடனடியாக அகற்றுமாறு அறிவுறுத்தி, யாழ்ப்பாணம் மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபரால் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு உத்தியோகபூர்வ கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
திலீபனின் நினைவுத் தூபி அமைக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் அண்மைக்காலமாக தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையிலேயே இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபரால் யாழ். மாநகர சபையின் ஆணையாளருக்கு அனுப்பப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதவது:-
“யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பருத்தித்துறை வீதி, றியோ ஐஸ்கிறீம் விற்பனை நிலையத்துக்கு முன்னால், முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்தவருமான திலீபன் என்பவரை நினைவுகூரும் வகையில், அவரது உருவச்சிலை ஒன்று கண்ணாடி இழைப் பொருளினால் தயாரிக்கப்பட்டு அங்கு நிறுவப்பட்டிருந்தது.
இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் தடைசெய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பின் உறுப்பினரை நினைவுகூரும் வகையில், நாட்டின் முக்கிய நகரமொன்றின் பொது இடத்தில் இவ்வாறான நினைவுச் சின்னங்கள் அமைக்கப்படுவது, மீண்டும் பொதுமக்கள் மத்தியில் யுத்த மனநிலையை உருவாக்குவதுடன், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பெரும் தடையாக அமையும் எனக் கண்டறியப்பட்டது.
இதனைக் கருத்திற்கொண்டு, இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் JAF/MC1/PC/02317/26-B என்ற வழக்கு இலக்கத்தின் கீழ் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அதனடிப்படையில், 2026.09.27ஆம் திகதி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினரால் திலீபனின் உருவச்சிலை அகற்றப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
மேலும், திலீபனின் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டிருந்த காணி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, குறித்த காணி நல்லூர் கோயிலுக்குச் சொந்தமான காணி என்பதும், அது குத்தகை அடிப்படையில் 2017.10.02ஆம் திகதி யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு வழங்கப்பட்டிருந்தமையும் தெரியவந்துள்ளது.
தற்போது திலீபனின் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டிருந்த அதே இடத்தில், அவரது புகைப்படத்தை வைத்து தற்காலிகமான மேடை போன்ற அமைப்பு ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.
இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் தடைசெய்யப்பட்டுள்ள பயங்கரவாத அமைப்பின் உறுப்பினரை நினைவுகூரும் வகையில், இவ்வாறான நினைவுச் சின்னங்களையும் கட்டமைப்புகளையும் பொது இடங்களில் அமைப்பது, மீண்டும் பொதுமக்கள் மத்தியில் யுத்த மனநிலையை ஏற்படுத்துவதுடன், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்குப் பெரும் தடையாக அமையும் என்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டிருந்த இடத்தில் தற்போது நிர்மாணிக்கப்பட்டுள்ள தற்காலிகக் கட்டுமானம் அனுமதியற்ற கட்டுமானம் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனவே, குறித்த காணி மாநகர சபைக்குச் சொந்தமான காணியாக இருப்பதனால், மாநகர சபைச் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக, அங்கு அமைக்கப்பட்டுள்ள அனுமதியற்ற கட்டுமானத்தை அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.” – என்றுள்ளது.
………










