” பொலிஸ், காணி அதிகாரம் வழங்குவதால் நாடு பிளவுபடாது” – சந்திரிக்கா

” தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு இதுவே சிறந்த தருணமாகும். இதைவிட நல்ல நேரம் கிடைக்கப்போவதில்லை. எனவே, வாய்ப்பை சரிவர பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.”

இவ்வாறு தெரிவித்துள்ளார் இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை இரு தடவைகள் வகித்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அம்மையார்.

மாகாணசபைகளுக்கு பொலிஸ், காணி அதிகாரம் வழங்குவது தொடர்பில் வீண் அச்சம் கொள்ளவேண்டியதில்லை எனவும், மேற்படி அதிகாரங்களை வழங்கினால் நாடு பிரியும் என்ற வாதம் ஏற்புடையது அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அதற்கான காரணங்களையும் பட்டியலிட்டார்.

” நாட்டில் போர் முடிவடைந்தாலும் போருக்கு வித்திட்ட பிரச்சினைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. அதற்கான ஆரம்பக்கட்ட முயற்சிகூட எடுக்கப்படவில்லை.

அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் அரசமைப்பில் உள்ள ஓர் அங்கம். அது சட்டப்பூர்வமானது, அதனை அமுல்படுத்துமாறே தமிழ்த் தலைவர்கள் கோருகின்றனர். இதனை ஏன் அமுல்படுத்த முடியாது?

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தும் நிலைப்பாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இருக்கின்றார். இது தொடர்பில் என்னுடனும் பேச்சு நடத்தினார். முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என நான் கூறினேன். ஆனால் நாட்டில் மாகாணசபைகள் இயங்கவில்லை. அதிகாரத்தை பகிர மாகாணசபை இருக்க வேண்டும். அப்படியானால் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு இதுவே சிறந்த தருணம். அன்று சந்திரிக்கா செய்தது சரி என்பதை மக்கள் இன்று ஏற்கின்றனர். 13 இற்கு அப்பால் சென்று அன்று நான் தீர்வை முன்வைத்தேன், மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெறுவற்கு 7 வாக்குகள்தான் போதுமானதாக இருக்கவில்லை. அந்த வாக்குகளை ஐக்கிய தேசியக் கட்சி வழங்கவில்லை. அவர்களுடன் ஐந்து மாதங்கள் பேச்சு நடத்திய பின்னரே அரசமைப்பை கொண்டுவந்தேன், பலவந்தமாக திணிக்கவில்லை. ஆனால் எதிர்த்து தீயிட்டுக்கொளுத்தினர்.

அத்துடன் இனப்பிரச்சினை விடயத்தில் அறகலய ஊடாகவும் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. நல்லிணக்கம் பிறந்துள்ளது. அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து செயற்பட்டனர். இளைஞர், யுவதிகளின் ஒன்றிணைந்த செயற்பாடுகளை காணும்போது விழிநீர் வந்தது. இது சிறந்த தருணம். நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் மறுநாளே இனப்பிரச்சினைக்கு தீர்வை முன்வைத்திருப்பேன்.

13 சட்டத்தில் உள்ளது, அதனை அமுல்படுத்தினால்போதும், அதற்கு மாகாணசபைகள் இருக்க வேண்டும்.

13 இல் பொலிஸ், காணி அதிகாரம் பற்றிதான் விமர்சனங்கள் எழுகின்றன. பொலிஸ் அதிகாரம் வழங்கினால் தனிநாடு உருவாக்கப்படும் எனவும் கூறுகின்றனர். முதலில் 13 இல் என்ன உள்ளது என்பதை படித்து அறியவும். பொலிஸ்மா அதிபர் தேசிய அரசால் நியமிக்கப்படுகின்றார், அவரால்தான் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் நியமிக்கப்படுகின்றனர், பொலிஸ்மா அதிபரின்கீழ்தான் இவர்கள் உள்ளனர். மாகாணத்தின் சட்டம், ஒழுங்கு தொடர்பில் இணைந்து செயற்பட வேண்டும். எஸ்.எஸ்.பியும் பொலிஸ்மா அதிபரால்தான் நியமிக்கப்பட வேண்டும். ஏ.எஸ்.பிக்கு கீழ்தான் மாகாணசபையால் நியமனம் வழங்க முடியும். இதனை செய்வதற்கு மாகாண பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதி வேண்டும். அந்த நியமனத்தில் அரசியல் தலையீடு இருக்காது. மேற்படி பொலிஸ் ஆணைக்குழுவில் மூவர் இடம்பெறுவர், ஒருவர்தான் பொலிஸ்மா அதிபரால் நியமிக்கப்படும் பிரதி பொலிஸ்மா அதிபர், மற்றையவர் அரச சேவை ஆணைக்குழு மற்றும் ஜனாதிபதியின் இணக்கப்பாட்டுடன் நியமிக்கப்படும் நபர், மூன்றாவது மாகாண முதல்வரின் பிரதிநிதி. எனவே, மூன்றிலிரண்டு அதிகாரம் மத்திய அரசிடம்தான் உள்ளது.

அடுத்தது மாகாண பொலிஸாருக்கான பயிற்சிகூட முழுமையாக மத்திய அரசால்தான் வழங்கப்படும். ஆயுத வழங்கலும் மத்திய அரசு வசம்தான் உள்ளது. அப்படியானால் பொலிஸ் அதிகாரத்தில் உள்ள அச்சம் என்ன?

மாகாணசபை எல்லைமீறி செயற்பட்டால் முழு அதிகாரத்தையும் ஜனாதிபதி தனது கட்டுப்பாட்டின்கீழ் எடுக்கலாம். இராணுவத்தையும் அனுப்பலாம்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles