தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மறைந்திருந்தாலும் அவரின் கொள்கைகள் இன்னும் வாழ்கின்றது. அதனை தொடர்ந்தும் முன்னெடுப்போம். மக்களின் மனங்களில் அவர் வாழ்கின்றார் – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு சபையில் இன்று அனுதாபம் தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து உரையாற்றுகையிலேயே ஜீவன் தொண்டமான் மேற்கண்டவாறு கூறினார்.
” அனுதாப பிரேரணை ஊடாக தலைவர் அமரர். ஆறுமுகன் தொண்டமானுக்கு மரியாதை செலுத்திய, அனுதாபம் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்.
மறைந்த தலைவர் எனது தந்தை ஆறுமுகன் தொண்டமான் கடந்த 26 ஆண்டுகளாக எமது மக்களுக்காக பல சேவைகளை ஆற்றியுள்ளார். தொழிற்சங்கம், அரசியல் என மக்களுக்கு உண்மையான சேவையை வழங்கியுள்ளார்.
பெருந்தோட்ட மக்களின் குழந்தைகளுக்கு கணணி கல்வி வழங்குவதற்கு அன்றே நடவடிக்கை எடுத்தார். தூரநோக்கு சிந்தனை அடிப்படையில் அவர் செயற்பட்டார்.
தந்தை இறந்திருந்தாலும் லட்சக்கணக்கான மக்களின் இதயங்களில் அவர் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார். அவரின் கொள்கைகளும் ஒருபோதும் சாகாது.” – என்றும் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டார்.