மலையக அரசியல் அரங்கத்தின் மாநாட்டில் மனோ , ஜீவன் பங்கேற்பு

மலையக அரசியல் அரங்கத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவு விழாவும் 3 ஆவது பேராளர் மாநாடும் 2026 நவம்பர் 28 ஆம் திகதி பதுளை நகரில் அமைந்துள்ள ஊவா மாகாண கேட்போர் கூட மண்டபத்தில் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெற உள்ளது .

இது ஒரு கட்சிக் கட்டமைப்பு சார்ந்து ஒழுங்கு செய்யப்பட்டாலும் கட்சி அரசியல் சார்ந்ததாக அல்லாமல் மலையக அரசியல், சமூகப் பண்பாட்டு உரையாடலுக்கான களமாக அமையும் என்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்களது வருகை இந்த முயற்சிக்கு வலு சேர்க்கும் என அழைப்பு விடுக்கின்றோம் என மலையக அரசியல் அரங்கம் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரங்கம் விடுத்திருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஐந்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஐந்து அமர்வுகளாக இடம்பெறும் இந்த நிகழ்வில் முதலாவது அமர்வு கோ.நடேசய்யர் அரங்கில் தொடக்க நிகழ்வாக அமையும். இதில் மாநாட்டுத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.

இரண்டாவது அமர்வு கோ. மீனாட்சியம்மை நினைவாக உரையரங்கமாக அமையவுள்ளது. இந்த அமர்வில் சமூக ஆய்வாளர் தெ.மதுசூதணன், தேர்தல் முறைமைகள் குறித்த ஆய்வாளர் மஞ்சுள கஜநாயக்க, சட்டத்தரணி மங்களா சங்கர், சட்டத்தரணி அரங்கம் முனீர், விரிவுரையாளர் செல்வி யாமினா கிருஷ்ணசாமி ஆகியோர் வெவ்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்தவுள்ளனர்.

மதிய உணவு இடைவேளையைத் தொடர்ந்து ஆய்வறிஞர் எல். சாந்திகுமார் அரங்கில் நூல் வெளியீடுகளும் உரைகளும் இடம்பெறும். இதில் மூன்று நூல் சிறப்பு பிரதிகளைப் பெற்று உரைகளை வழங்க முன்னாள் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி, சமூகச் செயற்பாட்டாளர் நடேசன் சுரேஷ், பிரபல ஒலிபரப்பாளர் நாகபூஷணி கருப்பையா ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.

நான்காவதாக சாகித்ய ரத்ன மு.சிவலிங்கம் அரங்கில் ஐந்தாம் ஆண்டு நினைவாக ஐவருக்கும், நான்காம் ஆண்டு நிறைவில் டித்வா அனர்த்தம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நான்கு விருது வழங்கலுமாக சேர்த்து ஒன்பது மலையக ஆளுமைகளுக்கு கௌரவ விருதுகள் வழங்கப்படவுள்ளது.

1. பி.பி தேவராஜ்
2. வீ புத்திரசிகாமணி
3. எம்.சச்சிதானந்தன்
ஆகியோர் அரசியல் சார்ந்த பணிகளுக்காகவும்

4.வை.தேவராஜா மலையகக் கல்வி பணிக்காகவும்

5. கந்தன் சாரதா
6. வெ.ஜெகநாதன்
7. ஆர். பாலசேகரன் ஆகியோர் தொழிற்சங்கப் பணிகளுக்காகவும்
8. மண்வாசனை விமலநாதன் – மலையகப் பாடல்களுக்காகவும்
9. நவரட்ணம் சமூக சேவைக்காக
கௌரவமளிக்கப்படவுள்ளனர்.

வாழ்நாள் சாதனையாளருக்கான விருது ஓய்வு நிலை ஆசிரியரும் சமூகச் செயற்பாட்டில் ஓயாது இயங்குபவருமான பிலிப் இராமையா அவர்களுக்கு வழங்கப்படவுள்ளமைக் குறிப்பிடத் தக்கது.

ஐந்தாவது அமர்வாக மாத்தளை ரோகிணி த. அய்யாத்துரை அரங்கில் சகோதர கட்சிகளின் உரைகள் இடம்பெறும்.

இதில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், மலையக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஆர்.இராஜாராம், தாயக மக்கள் கட்சியின் செயலாளர் ராஜன் தியாகராஜன் , உழைக்கும் மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் கண்மணி சிவநேசன் ஆகியோரும் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.

மலையக அரசியல் அரங்கத்தின் செயலதிபரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மயிலாவாகனம் திலகராஜா தலைமையில் இடம்பெறும் இந்த மாநாட்டில் ‘மலையகப் பிரகடனம்’ ஒன்றும் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத் தக்கது.

தகவல் – அரங்கம் ஊடகப்பிரிவு

Related Articles

Latest Articles