‘மலையக தொழிற்சங்கங்களின் முகவரி’ – கே.ஜி.எஸ் நாயர்!

எழுத்து – (சீ.கே.முருகேசு)
தொழிற்சங்க சந்தா ஆரம்பகாலத்தில் வீடு வீடாக சென்றுதான் சேகரிக்கப்பட்டது.  இலங்கை – இந்தியன் காங்கிரஸ் காலத்தில்  களனிவெளி பிரதேச தோட்டங்களுக்கு சென்று இவ்வாறு சந்தா சேகரித்தவர் அமரர் கே.ஜி.எஸ் நாயர் அவர்கள்.
தொழிலாளர்களுக்கான பஞ்சப்படி அதிகரிப்பை தனது சொந்தத் தோட்டத்திலிருந்தே ஆரம்பித்தவர் அமரர் பழனிச்சாமிப்பிள்ளை அவர்கள்.
அமரர் சௌ.தொண்டமான் அவர்களை போராட்டக்களத்திற்கு அழைத்து வந்த பெருமையும் எம்மையே சாரும்.தமிழரசு கட்சி உருவாகவும் நாம் காரணமாகியுள்ளோம்.
இவற்றுக்கு முழுமுதற்காரணமாக விளங்கிய அமரர் கே.ஜி.எஸ் நாயர் அவர்கள் பற்றிய இந்தக் கட்டுரையை வாசியுங்கள்.
(மே 12 நாயர் அவர்களின் 49 ஆவது நினைவு தினமாகும்)
அமரர் கே.ஜி.எஸ் நாயர்
இந்தியப் பிரதமர் பண்டிட் ஜவகர்லால் நேரு 1939ஆம் ஆண்டு இலங்கை வந்த போது மலையகத்துக்கு செல்லும் வழியில் களனி நதிப் பள்ளத்தாக்கில் எட்டியாந்தோட்டை நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டமே அன்னாரின் முதலாவது இலங்கை விஜயத்திற்கான நிகழ்வாகவும் இலங்கை இந்தியன் காங்கிரஸின் முதலாவது அடித்தளமாகவும் அமைந்தது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்து இந்நாட்டு இந்திய வம்சாவளி மக்களின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்திய பெருந்தலைவரே அமரர் கே.ஜி.எஸ்.நாயர்.
சௌமியமூர்த்தி தொண்டமானின் தொழிற்சங்க நடவடிக்கைகளில் முதலாவது போராட்டமாக அவர் கலந்து கொண்ட மகத்தான உருளவள்ளி போராட்டம் நாயரால் ஏற்பாடு செய்யப்பட்டு மலையக மக்களின் உரிமைக்காக எழுப்பப்பட்ட அறைகூவலாய் அமைந்தது. எட்டியாந்தோட்டையை அண்மித்த உருளவள்ளி தோட்டத்தில் வாழ்ந்த தமிழ் மக்களை அங்கிருந்து வெளியேற்றி விட்டு கிராமிய பெரும்பான்மை இன மக்களை அங்கு குடியேற்றுவதற்காக பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவின் அரசு மேற்கொண்ட முயற்சி காரணமாகவே இம்மாபெரும் போராட்டம் வெடித்தது.
கிழக்கிலங்கையில் அல்லை, கந்தளாய், கல்லோயா என குடியேற்றத்திட்டங்களை உருவாக்கி அவ்வரசு பெருந்தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புக்களையும் விட்டு வைக்கவில்லை. நேவ்ஸ்மியர் ஜனபதய என்ற பெயரில் உருளவள்ளித் தோட்டத்தையும் இவ்வாறு விழுங்கியது அரசு. பழம்பாசி தோட்டத்தை சிபோத் ஜனபதய என்னும் பெயரில் குடியேற்ற பிரதேசமாக்கியது. இத்தகைய தொடர் குடியேற்றங்களால் பெருந்தோட்ட தமிழ் மக்கள் அவதியுறாதிருக்கும் பொருட்டே நாயர் உருளவள்ளி போராட்டத்தை நடத்தினார்.
தலைவர் தொண்டமானையே தொழிற்சங்க போராட்ட களத்திற்கு இழுத்தவர் நாயர் என்றால் அது மிகையல்ல.தலைவர் தொண்டமான் தனது வேவண்டன் தோட்டத்தை ஈடு வைத்து சிறை இடப்பட்ட தொழிலார்களை பிணை எடுத்தார்.
இலங்கை – இந்தியன் காங்கிரஸின் பொதுச்செயலாளராகவும் இறுதியாக ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தலைவராகவும் விளங்கிய மற்றுமொரு பெருந்தலைவராகிய ஜனாப் அப்துல் அஸீஸை வரலாற்று சிறப்புமிக்க வளையல் போராட்டத்திற்கு தலைமை வகிக்க செய்ததன் மூலம் தலைவர் அஸீஸுக்கு போராட்ட களம் அமைத்து கொடுத்த தனித்துவம் மிக்க தொழிற்சங்கவாதியாக நாயர் விளங்குகின்றார்.
அல்கொல்ல தோட்டத்தின் வெள்ளைக்கார நிருவாகம், பெண்கள் கைகளில் வளையல் அணிந்து கொழுந்து பறிக்கக்கூடாதென விதித்த நிபந்தனையை கண்டித்து நாயரினால் மேற்கொள்ளப்பட்ட போராட்டமே வளையல் போராட்டம். பெட்டி பெட்டியாக வளையல்களை தோட்டத்திற்கு எடுத்துச்சென்று பெண்களின் கைகளில் அணிவித்து கொழுந்து பறிக்க செய்த வீர வரலாறு இதன் மூலம் பதியப்பட்டது.
இப்போராட்டத்தின் போது சினமுற்று கர்ஜித்த வெள்ளைத்துரையை கழுத்தைப்பிடித்து அவரோடு மோதியவராகிய வி.பழனிச்சாமிப்பிள்ளை நாயருக்கு உறுதுணையாக விளங்கியவராவார்.
கோணகல்தெனிய பிரதேசத்தில் தனலெட்சுமி தோட்டத்தின் உரிமையாளராகிய பழனிச்சாமிப்பிள்ளை கம்பனுக்கு சடையப்ப வள்ளல் போன்று நாயரோடு செயல்பட்டவராவார்.
இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமையை இரக்கமில்லாமல் அன்றைய அரசு பறித்தது. பாராளுமன்றத்தில் பதவியிலிருந்து மலையகத்தலைவர்கள் வெளியேற நேர்ந்தது. பிரஜாவுரிமையற்ற மக்களானபடியால் இந்த நாட்டில் ஓர் அங்குல நிலமேனும் உரிமை கொண்டாட முடியாதவர்களாகவும் அரச தொழில் வாய்ப்புக்களை பெற இயலாதவர்களாகவும் இம்மக்கள் ஆக்கப்பட்டனர்.
நகரசுத்திகரிப்பு தொழிலும் மனிதக்கழிவுகளை கையுறை, காலுறையின்றி அள்ளும் ஈனத்தனமான தொழில் வாய்ப்புக்கள் மட்டும் வழங்கப்பட்டன. வாக்குரிமையற்றவர்களாகவும் வாக்கு கேட்கும் தகுதியற்றவர்களாகவும் இந்திய வம்சாவளி மக்கள் நட்டாற்றில் விடப்பட்டனர். இதனால் வெடித்த மாபெரும் சத்தியாக்கிரக போராட்டத்தின் சூத்திரதாரி கே.ஜி.எஸ். நாயரேயாவார்.
காலி முகத்திடல் பாராளுமன்றக் கட்டிடத்திற்கு வெளியே மலையக தலைவர்கள் சாத்வீக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்சியாளர்கள் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டனர். தலைவர்கள் சௌ. தொண்டமான், அப்துல் அஸீஸ், கே. இராஜலிங்கம் முதலானோர் அடித்து துன்புறுத்தப்பட்டனர்.
வாகனங்களில் மரக்குற்றிகளைப் போன்று தலைவர்களும் தொண்டர்களும் ஏற்றப்பட்டு தொலையிடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு கைவிடப்பட்டனர். துணிவு மிக்க நாயரும் பழனிச்சாமிபிள்ளையும் இவர்களைப் பின் தொடர்ந்து சென்று மீண்டும் தூக்கிவந்து போராட்டக்களத்தில் அமரவைத்தனர்.
குடியுரிமைப்பறிப்புக்கெதிராக தந்தை செல்வா பாராளுமன்றத்தில் குரல் எழுப்பினார். வெளியில் வந்து சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்த தலைவர்களுக்கு ஆறுதல் கூறினார். தாம் அங்கம் வகித்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி தமிழரசுக் கட்சியை உருவாக்கினார். இதன் மூலம் அகில இலங்கை தமிழரசுக்கட்சியின் தோற்றத்திற்கு நாயர் நடத்திய குடியுரிமைப் போராட்டமே வழிவகுத்ததெனலாம்.
குடியுரிமைப் பறிப்புக்கெதிராக இந்நாட்டு இந்திய வம்சாவளி மக்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சரித்திரப்பிரசித்தி பெற்ற வழக்கு கொட்டம்பிள்ளை வழக்கு என பெயர் பெற்றது. இந்த வழக்கின் மனுதாரர் கே.ஜி.எஸ் நாயரே. கொட்டம்பிள்ளை கோவிந்தன் செல்லப்ப நாயர் என்றும் அவரது முழுப்பெயரின் முன்பகுதியை கொட்டம்பிள்ளை என தவறுதலாக குறிப்பிட்டு இவ்வாறு வழங்கலாயிற்று.
இவ்வழக்கு லண்டன் பிரிவு கவுன்சில் வரை எடுத்துச்செல்லப்பட்டது. இதன் மூலம் நாயர் இந்நாட்டு இந்தியவம்சாவளி மக்களின் விடிவுக்காக எத்தகைய பங்குவகித்தவரென்பதையுணரலாம்.
இலங்கை – இந்தியன் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என பெயர் மாற்றம் பெற்றது.
நாளடைவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அமைப்பில் வலதுசாரி இடதுசாரி போக்குடையோர் மத்தியில் பிரச்சினைகள் தலைதூக்கின. முற்போக்குச் சிந்தனையாளரான அப்துல் அஸீஸ் தலைமையில் ஒரு சாரார் வெளியேறினர். அவர்களில் கே.ஜி.எஸ் நாயரும் ஒருவராவார்.
இவர்கள் ஜனநாயக தொழிலாளர் காங்கிரசை உருவாக்கினர். தலைவராக அஸீஸ், பொதுச் செயலாளராக நாயரும் தெரிவுசெய்யப்பட்டார்கள். திரு பழினிச்சாமிப் பிள்ளை ஜ.தொ.கா.வின் தர்மகர்த்தாவாக நியமிக்கப்பட்டார். இ.தொ.கா.வுக்கு ஈடான மிகப்பெரிய தொழிற்சங்கமாக ஜ.தொ.கா. விளங்கியது.தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து கூடிய கரிசனை காட்டியது ஜ.தொ.கா.வாகும்.
ஆண்–பெண் சம சம்பளம், பிரசவ சகாய நிதி முதலிய கோரிக்கைகளும் வேலைநாட்களுக்கேற்ப போனஸ் வழங்கப்பட வேண்டும் என்பன முதலான பல்வேறு கோரிக்கைகள் ஜ.தொ.கா.வினால் முன்வைக்கப்பட்டவையாகும். பஞ்சப்படியாக 17 ரூபா 50 சதம் வழங்கப்பட வேண்டுமென்றும் நாற்பது நாள் வேலை நிறுத்தப்போராட்டம், மாற்றுத் தொழிற்சங்கங்களின் சூழ்ச்சியினால் முறியடிக்கப்பட்டாலும் பழனிச்சாமிப் பிள்ளை தமது தோட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களின் மாதாந்த சம்பளத்துடன் 17 ரூபா 50 சதத்தைச் சேர்த்து வழங்கினார்.
நாயரோடு கைகோர்த்து அரும்பணியாற்றி வள்ளல் தன்மையும் துணிவும் கொண்ட வி.பழனிச்சாமிப்பிள்ளை பின்னாளில் ஜ.தொ.கா. பொதுச்செயலாளராக பதவி வகித்த வி.பி கணேசனின் தந்தையும்,முன்னாள் அமைச்சர்,பாராளுமன்ற உறுப்பினர்,ஜமமு,தமுகூதலைவர் மனோ கணேசன் அவர்களின் பாட்டனாருமாவார்.
இலங்கை–இந்தியன் காங்கிரசின் ஆரம்ப காலத்தில் தோட்டம் தோட்டமாக சென்று தொழிற்சங்க சந்தாப்பணம் இருபத்தைந்து சதமாக வசூலித்து சேவையாற்றிய நாயர்.
தமது வாழ்வாதார தொழிலான தையற் கலையை சரிவர மேற்கொள்ளாமலும் குடும்பத்தைப் பற்றிச் சிந்திக்காமலும் தொழிலாளர் நலனுக்காக உழைத்து தொழிற் சங்க பணிமனையிலேயே உயிர் துறந்ததன்பின்னர் வறுமையில் வாடிய அவரது குடும்பத்தை கேரளத்திற்கு உறவினர் களிடம் அனுப்பிவைப்பதற்காக தொழிலாளர்களி டம் நிதி வசூலிக்க வேண்டிய நிலையேற்பட்டது.
அமரர் கே.ஜீ.எஸ் நாயரின் இறுதிச் சடங்கிலும் கலந்துகொண்ட தந்தை செல்வா சத்தியாக்கிரக போராட்டத்தின்போது நாயர் மூலம் காந்தீய அறப்போரை நேரில் காணும் பாக்கியம் பெற்றேன் அதுவே என்னை அகிம்சைவழி போராட்டத்திற்கு இட்டுச்சென்றது என்றார்.மறைந்தும் மறையாத கே.ஜி.எஸ்.நாயர் மலையக தொழிற்சங்கங்களின் முகவரி என்றால் அது மிகையன்று.
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05
Video thumbnail
மலையகம் நேற்று இன்று நாளை I Shortfilm
06:51
Video thumbnail
நிலைமாற்றம் I ShortFilm
07:21

Related Articles

Latest Articles