மலையக மக்களின் நீண்டகால காணி உரிமைப் பிரச்சினைக்கு நிலையான தீர்வை வழங்கும் வகையில், பெருந்தோட்ட கம்பெனிகளுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள நிலங்களில் மக்கள் குடியிருக்கும் பகுதிகள் மற்றும் வீடமைப்புக்கு உகந்த நிலப்பரப்புகளை இனங்கண்டு மீளப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நோர்வூட் பிரதேச சபையில் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் நடைபெற்ற நோர்வூட் பிரதேச சபை அமர்வில் உறுப்பினர் கணேஷன் இளையராஜா இந்த பிரேரணையை முன்வைத்தார்.
பிரேரணையை முன்வைத்து கருத்து தெரிவித்த அவர்,
மலையக மக்கள் தற்போது எதிர்கொள்ளும் மிக முக்கியமான உரிமை சார்ந்த பிரச்சினைகளில் காணி உரிமை முக்கிய இடம் வகிப்பதாகவும் இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக லயன் அறை குடியிருப்புகளில் வாழ்ந்து வரும் மலையக மக்களுக்கு சொந்தக் காணி மற்றும் தனி வீடு என்பது சமூக மரியாதை மற்றும் வாழ்வாதார முன்னேற்றத்திற்கான அடிப்படை உரிமையாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பெருந்தோட்ட நிறுவனங்களுடன் செய்யப்பட்டுள்ள குத்தகை ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்து, மக்கள் வாழ்வதற்கும் சிறு விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் பொருத்தமான நிலங்களை அடையாளம் கண்டு மீளப்பெறுவது அவசியம் என அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் மக்களுக்கு காணி உரிமை கிடைத்தால் மட்டுமே வீட்டுத் தோட்டம் மற்றும் சிறு விவசாயம் மூலம் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்றும், அரசாங்கம் மற்றும் சர்வதேச அமைப்புகள் முன்னெடுக்கும் பல வீடமைப்புத் திட்டங்கள் நில உரிமை இல்லாத காரணத்தால் மக்களை சென்றடைய முடியாமல் போகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், கல்வி கற்று வேறு துறைகளில் முன்னேற விரும்பும் மலையக இளைஞர்களுக்கு சொந்த நிலம் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை வழங்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது, மலையக உள்ளூராட்சி மன்றங்கள் எதிர்கொள்ளும் நீண்டகால சட்டத் தடைகளும் எடுத்துரைக்கப்பட்டன. 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் படி, உள்ளூராட்சி மன்றங்கள் தங்களது நிர்வாக எல்லைக்குள் உள்ள பொது இடங்கள் மற்றும் பொதுச் சொத்துக்களுக்கே நிதி ஒதுக்க முடியும்.
ஆனால் பெருந்தோட்டப் பகுதிகள் தனியார் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதால், அப்பகுதிகளில் பிரதேச சபைகளால் நேரடியாக அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.
இதன் காரணமாக தோட்டப் பகுதிகளில் சாலைப் புனரமைப்பு, குடிநீர் வசதி, மின்சார கட்டமைப்பு, கழிவகற்றல் மற்றும் சுகாதார வசதிகள் போன்ற அடிப்படை சேவைகளை வழங்குவதில் பாரிய சிக்கல்கள் நிலவுகின்றன. மக்கள் உள்ளூராட்சி வரிகளை செலுத்தினாலும், நகர்ப்புற மக்களுக்கு கிடைக்கும் பல அடிப்படை வசதிகள் அவர்களுக்கு கிடைக்காத நிலை தொடர்கிறது.
இந்த நிலையை மாற்றுவதற்காக, பெருந்தோட்ட கம்பெனிகளின் குத்தகை எல்லைக்குள் உள்ள குடியிருப்புப் பகுதிகள், பொதுப் பாதைகள் மற்றும் மக்கள் பயன்பாட்டு நிலப்பகுதிகளை சட்டரீதியாக பிரித்து, அவற்றை பிரதேச சபைகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வேண்டும் என பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான பிரேரணைகள் மலையக உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக முன்வைக்கப்பட்டு, பின்னர் நாடாளுமன்ற மட்டத்தில் கொள்கை மற்றும் சட்ட மாற்றங்களாக அமுல்படுத்தப்பட்டால் மட்டுமே மலையக மக்களின் காணி உரிமை முழுமையாக உறுதி செய்யப்படுவதுடன், தோட்டப் பகுதிகளில் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் துரிதப்படுத்த முடியும் என உறுப்பினர் கணேஷன் இளையராஜா தெரிவித்தார்.
மலைவாஞ்ஞன்










