“சுரேஷ் சலே சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படவில்லை. விசாரணைகளை திசைதிருப்பவே சில அரசியல்வாதிகள் முற்படுகின்றனர். கோட்டாபய ராஜபக்ச உட்பட இருவருக்கு பயணம் தடை விதிக்கப்பட்ட பின்னரே குழப்பம் அடைந்துள்ளனர்.”
இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது சுரேஷ் சலே விவகாரம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு ,
“ சுரேஷ் சலேவுக்கு தடுப்பு காவலின்கீழ் சித்திரவதை இடம்பெறவில்லை. அவருக்காக விசேட நடைமுறையும் பின்பற்றப்படவில்லை.
சிஐடியில் தடுப்பு காவலின்கீழ் இருக்கும் நபரொருவர் தொடர்பில் பின்பற்றப்படும் நடைமுறைகளே பின்பற்றப்பட்டுவருகின்றன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை திசைதிருப்ப வேண்டிய தேவைப்பாடு சிலருக்கு இருக்கின்றது. அதன் பின்னணியில் உள்ள அரசியல் தொடர்பையும் திசை திருப்ப முற்படுகின்றனர்.
குறித்த விசாரணைகளை விரைவில் நிறைவுக்கு கொண்டுவந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதே எமது பொறுப்பாகும்.
சுரேஷ் சலேவுக்கு சித்திரவதை செய்யப்படவில்லை. 90 நாட்கள் அவர் அமைதியாகவே இருந்தார். ஆனால் கோட்டாபய ராஜபக்ச உட்பட இருவருக்கு எதிராக பயணத்தடை விதிக்கப்பட்ட பின்னரே சிலர் குழப்பம் அடைந்துள்ளனர்.
பயங்கரவாத தடைச்சட்டம் நிச்சயம் நீக்கப்படும். தற்போது அச்சட்டம் அமுலில் இருப்பதால் அச்சட்டத்தின்கீழ் நடவடிக்கை இடம்பெறுகின்றது.” – என்றார்.










