என் இனிய தமிழ் மக்களே!’
இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய மக்களின் வாழ்க்கையில் பொதிந்திருக்கும் உணர்வுகளை தத்துவார்த்தமாகப் படைத்து பாரதிராஜா இயக்குநர் இமயமாக உயர்ந்தார். இப்பூவுலகில் இல்லாமல் போனாலும் இனியும் அவர் இமயம்தான்.
ஸ்டூடியோ செட்களின் சங்கிலியில் இருந்து கேமராவை விடுவித்து லொகேஷன்களுக்கு கூட்டிச் சென்றவர் பாரதிராஜாதான். அதுமட்டுமா செய்தார்… கதாநாயகனுக்கான பிம்பங்களை தேவைக்கேற்ப வளைத்துக் கொள்வார். அதுவும் தனது முதல் படத்திலேயே!
‘16 வயதினிலே’ கமலை உங்கள் கண்முன் கொண்டுவந்து பாருங்கள் அவருடைய கலையாற்றலின் நுணுக்கம் புரியும். ‘டஸ்கி ஸ்கின்’ கதாநாயகிகளுக்கு இன்றும் இண்டஸ்ட்ரியில் உரிமைக் குரல் ஒலிக்க, அதை சத்தமே இன்றி அன்றே செய்தவர்.
தமிழ் சினிமாவின் தாத்பரியங்களை வகுத்தவர் எனலாம். அதனாலேயே அதை பா.மு – பா.பி என்று பிரிக்கும் அளவுக்கு பாரதிராஜா சினிமா மாணவர்களுக்கு என்றென்றும் ஒரு தனிப்பாடம். சினிமா ரசிகர்களுக்கு என்றைக்கும் ஒரு சொர்க்கம். ‘பாரதிராஜா சினிமாடிக் யுனிவர்ஸ்’ என்று அவர் சுயபிரகடனம் செய்துகொள்ளவில்லையே தவிர, அப்படியான ஒன்று யாராலும் நிகர் செய்ய முடியாத உச்சம்.
அல்லிநகரம் டூ சினிமாவின் ஓயாத அலையான பாரதிராஜாவின் வாழ்க்கை வரலாற்று சுவாரஸ்யங்களைத் திரும்பிப் பார்ப்போம்.
தேனி மாவட்ட அல்லிநகரத்தில் மாயத்தேவர் – மீனாட்சி அம்மாள் தம்பதிக்கு 1941 ஜூலை 17-ல் பிறந்த பாரதிராஜாவின் இயற்பெயர் சின்னசாமி.
பள்ளிப் பருவத்திலேயே நாடக நடிப்பு தொற்றிக் கொண்டது. இருந்தாலும், நன்றாகவே படித்தார். ஊர் ஊராக சென்று மக்களிடம் நோய் பற்றி விசாரித்து அறிக்கைகள் தயாரிக்கும் சுகாதார ஆய்வாளர் வேலையும் கிடைத்தது. ஒரு கட்டத்தில் நாடகங்களுக்கு கதையை எழுதி, அரங்கேற்றவும் ஆரம்பித்தார்.
வேலையும், நாடகமுமாக வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்க பண்ணைபுரத்தில் இளையராஜா, கங்கை அமரன், பாஸ்கர் ஆகியோரோடு நட்பு ஏற்பட்டது. கம்யூனிஸ்ட் மேடைகளில் இசை வாசிக்க அண்ணன் பாவலர் வரதராஜனோடு சென்ற ராஜா அண்ட் கோ, பாரதிராஜாவின் நாடகத்துக்கு இசை வாசிக்க மதுரை சென்றார்கள்.
பாரதிராஜா இயக்கிய ‘ஊர் சிரிக்கிறது’, ‘சும்மா ஒரு கதை’ போன்ற நாடகங்கள் புதுமையாக இருந்தன. இவர்களின் நாடக ஆர்வத்தை பார்த்த கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யாவின் அண்ணன் மகன் ‘அன்னக்கிளி’ செல்வராஜ், இவர்களுடன் நட்பு கொண்டார்.
சினிமாவுக்குச் சென்றால் பெரிய அளவில் புகழ் பெறலாம் என்று கருத்துகள் பகிர்ந்து கொண்டார்கள். முதலில் ‘அன்னக்கிளி’ செல்வராஜ் சினிமாவில் சேர சென்னைக்கு வந்தார். அதன் பிறகு பாரதிராஜா வந்தார். சினிமாவில் உடனே வாய்ப்பு அமையவில்லை. வாழ்க்கை நடத்துவதே பெரும் போராட்டமாக இருந்தது.
இந்த நிலையில் பாஸ்கர், இளையராஜா, கங்கை அமரன் மூவரும் புறப்பட்டு சென்னைக்கு வந்தார்கள். சங்கிலிமுருகன் நடத்திய நாடகங்களுக்கு இசை அமைத்தார்கள். இசை கச்சேரி நடத்தவும் சென்றார்கள். இசை கச்சேரியில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாட வந்தார். எஸ்.பி.பாலசுப்பிரமணியமும் அவர்கள் நட்பு வட்டத்தில் சேர்ந்தார்.
திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்த இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷின் அறிமுகம் கிடைக்க அவரிடம் கிட்டார் வாசிக்க சென்றார், இளையராஜா. இளையராஜா கேட்டுக் கொண்டதற்கு இணங்க கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராக கங்கை அமரனை சேர்ந்துவிட்ட ஜி.கே.வெங்கடேஷ், இயக்குநர் புட்டண்ணா கனகலிடம் பாரதிராஜாவை உதவியாளராக சேர்த்துவிட்டார்.
புட்டண்ணா கனகலிடம் ‘இருளும் ஒளியும்’ படத்தில் உதவி இயக்குநராக பணி புரிந்த பாரதிராஜா, அடுத்து கே.ஆர்.ஜி. தயாரிப்பில் கிருஷ்ணன் நாயர் இயக்கிய ‘தலைப்பிரசவம்’ படத்தில் உதவி இயக்குராக பணிபுரிந்தார். அடுத்து கே.ஆர்.ஜி. தயாரிப்பில் ஏ.ஜெகநாதன் இயக்கிய ‘அதிர்ஷ்டம் அழைக்கிறது’ படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்தார்.
தனது படங்களில் பாரதிராஜாவின் திறமையை அறிந்த கே.ஆர்.ஜி. அவருக்கு படம் இயக்கும் வாய்ப்பை வழங்கினார். முத்துராமன் கதாநாயகன், ஜெயலலிதா கதாநாயகி, வி.குமார் இசையமைப்பாளர் என்று முடிவாகி, படத்துக்கு ‘சொந்த வீடு’ என்று பெயர் சூட்டப்பட்டது. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே ஜெயலலிதா படத்தில் இருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்ததால் அந்தப் படம் டிராப் ஆனது.
அதன்பிறகு கே.ஆர்.ஜி.யின் அலுவலகத்துக்கு பைனான்சியராக வந்த எஸ்.ஏ.ராஜ்கண்ணுவிடம் பேசிக் கொண்டிருந்தபோது ‘மயிலு’ என்கிற கதையை பாரதிராஜா சொல்லி இருக்கிறார். அந்தக் கதை எஸ்.ஏ.ராஜ்கண்ணுவுக்கு பிடித்துவிட்டது. அதற்கு ’16 வயதினிலே’ என்று பெயர் வைத்து கமல், ரஜினி, சத்யஜித், ஸ்ரீதேவி, காந்திமதி நடிப்பில், நிவாஸ் ஒளிப்பதிவில் படமாக்க முடிவு செய்தார்.
இவர்களின் நட்பு வட்டத்தில் இருந்த ‘அன்னக்கிளி’ செல்வராஜ், கதாசிரியர் பஞ்சு அருணாச்சலத்திடம் உதவியாளராக இருந்து, அவர் தயாரித்த ‘அன்னக்கிளி’ படத்திற்கு இளையராஜாவை அறிமுகம் செய்து இசையமைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருந்தார்.
தேவராஜ் – மோகன் இயக்கத்தில் ‘அன்னக்கிளி’ படம் வெளியாகி பெரும் வெற்றிப் படமாக அமைந்து இளையராஜா புகழ் பெற்றார். உடனே தனது நண்பர் இளையராஜாவை ’16 வயதினிலே’ படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பை தொடங்கினார், பாரதிராஜா.
1977-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி வெளியான ’16 வயதினிலே’ படம் பெரும் வெற்றிப் படமாக அமைந்து, வசூலில் சாதனை படைத்தது. முதல் படத்திலேயே சிறந்த இயக்குநருக்கான தமிழக அரசின் விருது பெற்றார்.
மீண்டும் எஸ்.ஏ.ராஜ்கண்ணுவின் தயாரிப்பில் சுதாகர், ராதிகாவை அறிமுகப்படுத்தி ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தை இயக்கிய பாரதிராஜா, அடுத்து தனது வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் அக்கறை கொண்ட கே.ஆர்.ஜி. தயாரிப்பில் கமல், ஸ்ரீதேவி நடிப்பில் ‘சிவப்பு ரோஜாக்கள்’ படத்தை இயக்கினார்.
தனது உதவியாளர் கே.பாக்யராஜ் நடிப்பில், தனது தயாரிப்பில் ‘புதிய வார்ப்புகள்’ படத்தை இயக்கிய பாரதிராஜா, இன்னொரு உதவியாளரான கே.விஜயன், சுதாகர், ராதிகா நடிப்பில் ‘நிறம் மாறாத பூக்கள்’ படத்தை இயக்கினார். இதில் கே.விஜயனுக்கு அவரே டப்பிங் பேசி இருந்தார்.
அடுத்து ‘கல்லுக்குள் ஈரம்’ படத்தில் அவரே கதாநாயகனாக அறிமுகமானார். அவரது படங்களின் ஒளிப்பதிவார் நிவாஸ் படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் அருணா, விஜயசாந்தி இருவரையும் கதாநாயகிகளாக அறிமுகம் செய்தார்.
‘சிவப்பு ரோஜாக்கள்’ படத்தை தெலுங்கு மொழியில் ‘கொத்த ஜீவித்தலு’ என்கிற பெயரிலும், இந்தி மொழியில் ‘ரெட் ரோஸ்’ என்கிற பெயரிலும் இயக்கிய பாரதிராஜா, அடுத்து தனது உதவியாளர் மணிவண்ணன் கதையில் ‘நிழல்’ என்கிற படத்தை இயக்கினார். அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
மீண்டும் தனது உதவியாளர் மணிவண்ணன் சொன்ன கதையில் ‘அலைகள் ஓய்வதில்லை’ என்கிற படத்தை தனது நண்பனும், இளையராஜாவின் சகோதரருமான பாஸ்கர் தயாரிப்பில் இயக்கினார். அந்தப் படத்தில் கார்த்திக் நாயகனாகவும், ராதா கதாநாயகியாகவும், தியாகராஜன் வில்லனாகவும் அறிமுகமானார்கள். இந்தப் படத்திற்காக தமிழக அரசின் சிறந்த இயக்குநருக்கான விருது பெற்றார்.
மேலும், ‘டிக்டிக்டிக்’, ‘காதல் ஓவியம்’, ‘வாலிபமே வாவா’, ‘மண்வாசனை’, ‘புதுமைப்பெண்’, ‘ஒரு கைதியின் டைரி’, ‘முதல் மரியாதை’, ‘கடலோர கவிதைகள்’, ‘வேதம் புதிது’, ‘கொடி பறக்குது’, ‘என்னுயிர் தோழன்’, ‘புது நெல்லு புது நாத்து’, ‘நாடோடி தென்றல்’, ‘கேப்டன் மகள்’, ‘கிழக்கு சீமையிலே’, ‘கருத்தம்மா’, ‘பசும்பொன்’, ‘தமிழ்செல்வன்’, ‘அந்தி மந்தாரை’, ‘தாஜ்மகால்’, ‘கடல் பூக்கள்’, ‘ஈரநிலம்’, ‘கண்களால் கைது செய்’, ‘பொம்மலாட்டம்’, ‘அன்னக்கொடி’, ‘மீண்டும் ஒரு மரியாதை’ ஆகிய தமிழ் படங்கள், சீதாகொகா சிலுகா, யுவதாரம் புலிச்சின்டி, ஈதரம் இல்லலு, ஜமடகனி, ஆராதனா ஆகிய தெலுங்கு படங்களையும், சொல்வ சவான், லவ்வர்ஸ், சாவேரே வலி காடி ஆகிய இந்திப் படங்கள் எனெ 40 ப்ளஸ் படங்களை இயக்கியிருக்கிறார்.
16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், கல்லுக்குள் ஈரம், டிக்டிக்டிக், என்னுயிர் தோழன், கடல் பூக்கள், பொம்மலாட்டம் உள்பட 12 படங்களுக்கு கதை எழுதியவர், கே.பாக்யராஜ், மணிவண்ணன், கலைமணி, ‘அன்னக்கிளி’ செல்வராஜ், பஞ்சு அருணாசலம், வேதம் புதிது கண்ணன் ஆகியோரின் கதைகளிலும் படம் இயக்கி இருக்கிறார்.
‘கல்லுக்குள் ஈரம்’ படத்தில் நடிகராக அறிமுகமான பாரதிராஜா, அதன் பிறகு நிழல்கள், தாவணி கனவுகள், உள்பட இருபது படங்களில் நடித்திருக்கிறார்.
கே.பாக்யராஜ், ராதிகா, மணிவண்ணன், நெப்போலியன், நிழல்கள் ரவி, அருணா, விஜயசாந்தி, உஷா, கவுண்டமணி, கார்த்திக், ராதா, தியாகராஜன், ரேவதி உள்ளிட்ட பலரை திரையுலகில் அறிமுகம் செய்தவர், மகன் மனோஜ் கே.பாரதியை ‘தாஜ்மஹால்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தி அந்தப் படத்தை இயக்கி தயாரித்தவர், ‘அல்லி அர்ஜுனா’ படத்தையும் மகனுக்காக தயாரித்தார்.
இவரது ‘முதல் மரியாதை’ படம் 1986-ல் தாஷ்கண்ட் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. தன் தாய் கருத்தம்மாவின் பெயரில் வெளிவந்த ‘கருத்தம்மா’ படத்துக்காக தேசிய விருதை தன் தாயையே பெற்றுக்கொள்ள வைத்தார்.
பாரதிராஜா தனது சகோதரியின் மகள் சந்திர லீலா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு மனோஜ் என்கிற மகனும், ஜனனி என்கிற மகளும் பிறந்தனர். மகன் மனோஜ் தாஜ்மகால் படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து 15-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர், சென்ற ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் தேதி மாரடைப்பால் காலமானார்.
தமிழக அரசின் விருதுகள், ஃபில்ம் ஃபேர் விருதுகள், தேசிய விருதுகள் தொடங்கி பத்மஸ்ரீ வரைக்கும் பாரதிராஜாவை தேடி வந்து கவுரவித்தன.
பாரதிராஜா எனும் ஆளுமையை இந்த சில விவரிப்புகளுக்குள் மட்டும் சுருக்கிவிட முடியாது. அவர் பேசித் தீர்க்க முடியாதவர். அவரது நாயகிகள் பேசிய திரைமொழி பற்றி தனி ஆய்வுக் கட்டுரையே எழுதலாம். அவருடைய திரைப்படங்கள் காதலை மட்டுமல்ல, காதலின் பிற பரிமாணங்களை சுவாரஸ்யங்களுடன் பேசியவை.
“சாதி, மத பேதங்கள் எல்லாம் முன்னவங்க செஞ்ச மோசம்னு” வரிக்கேற்ப சாதி மறுப்பை சமூகத்துக்கு வலிமையான ஆயுதமான திரைவழி சொன்னவர். தனா இயக்கத்தில் ‘படைவீரன்’ படத்தில் பாரதிராஜா சாதி எதிர்ப்பை நடித்துக்காட்டிய விதம் அழுத்தமானது.
ஓர் உன்னத இயக்குநரைவிட சிறந்த நடிகர் இருக்கமுடியாது என்று ஒரு ரசிகையாக பாரதிராஜாவைப் பார்த்து வியந்து மவுனித்தது அந்தப் படத்தில்தான்.
பெண் சிசுக் கொலையை ‘கருத்தம்மா’வாக கண்டித்தவர்தான் காலத்திற்கேற்ப சினிமா நுணுங்களின் தன்னைப் பொருத்திக் கொண்டு ‘பொம்மலாட்டம்’ போன்ற திரைப்படத்தையும் கொடுத்தவர்.
ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படாமல் போன படம் ‘பொம்மலாட்டம்’. போகட்டும்! கொண்டாட்டங்களும், விருதுகளும் மட்டுமே படைப்பினை உச்சி முகர்வதாகிவிடாது. ஒரு கடைக்கோடி ரசிகனின் சிறு புன்னகையோ, ஒரு துளி கண்ணீரோ அல்லது அவன் சிந்தனையை சொடுக்குவதோ தான் படைப்பாளியின் வெற்றி. பாரதிராஜாவின் வெற்றி தொடர்ந்து கொண்டே இருக்கும்.










