மஹிந்தானந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!

விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டுவருவது தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஆராய்ந்துவருகின்றது என அறியமுடிகின்றது.

இது தொடர்பான ஆரம்பகட்ட பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன எனவும், பங்காளிக்கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தப்பட்டுவருவதாகவும் தெரியவருகின்றது.

விவசாயத்துறை அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை முன்வைப்பது தொடர்பில் இதற்கு முன்னரும் ஐக்கிய மக்கள் சக்தி ஆராய்ந்திருந்தாலும், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இடைநிறுத்தப்பட்டதால் அது பற்றி கூடுதல் கவனம் செலுத்தப்படவில்லை.

முறையற்ற உர முகாமைத்துவத்தால் விவசாயத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, முறையற்ற கொடுக்கல், வாங்கல்கள் காரணமாக சீனாவுடன் ஏற்பட்டுள்ள இராஜதந்திர நெருக்கடி, திரவ உரம் இறக்குமதியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மோசடி உட்பட மேலும் பல விடயங்களை மையப்படுத்தியே நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைப்பது குறித்து ஆராயப்படுகின்றது.

எனினும் தற்போதைய சூழ்நிலையில் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கொண்டு வந்தால் அது அரசுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும் எனவும், அதன்மூலம் அரசு பலமடையும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால் விவசாயத்துறை அமைச்சரை விமர்சித்துவரும் சுதந்திரக்கட்சி உறுப்பினர்களைின் ஆதரவை பெறமுடியும். அவ்வாறு இல்லாவிட்டால், அவர்கள் வாக்கெடுப்பை புறக்கணித்தால்கூட அரசின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆட்டம் காணும் எனவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

இவ்வாரத்துக்குள் இறுதி முடிவொன்று எடுக்கப்படலாம்.

அதேவேளை, பொருட்கள் விலையேற்றம் உட்பட மேலும் பல விடயங்களை மையப்படுத்தி ஒட்டுமொத்த அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவந்தால், அதன்மூலமும் அரசு பலமடையும் என்பதால், விவசாயத்துறை அமைச்சருக்கு எதிராக கொண்டுவருவதே சிறப்பென ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles