‘மாகாணசபைத் தேர்தல் வேண்டாம்’ – மல்வத்துபீடம் வலியுறுத்து

மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டாம் என்று இலங்கையிலுள்ள மிக முக்கிய பௌத்த பீடங்களில் ஒன்றான மல்வத்துபீடம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட  மல்வத்து பீடத்தின் அனுநாயக்கர் திம்புல்கும்புரே விமலதர்ம தேரர் கூறியவை வருமாறு,

” மாகாணசபை என்பது வெள்ளையானை. அதனிடம் வேலை வாங்கமுடியாது. மாறாக உணவுகளை மாத்திரமே வழங்கிக்கொண்டிருக்கவேண்டும். அவ்வாறானதொரு நிலைமை எமது நாட்டுக்கு தேவையில்லை.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இன்று மக்கள் வாழும் பகுதிகளுக்கு நேரில் சென்று பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கிவருகின்றார். எனவே, மாகாணசபைகள் வேண்டாம். அதற்கான தேர்தலை நடத்த வேண்டாம் என மகாநாயக்க தேரர்களின் சார்பில் கோரிக்கை விடுக்கின்றேன்.” – என்றார்.

அதேவேளை, கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்களின்போது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு சார்பாக செயற்பட்ட பௌத்த அமைப்புகளும், பௌத்த தேரர்களும் மாகாணசபை முறைமைவேண்டாம், அதனை இல்லாதொழிக்கவேண்டும் என வலியுறுத்திவருகின்றனர்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மல்வத்துபீடத்தின் முக்கிய தேரரும் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles