ரம்புக்கனை சம்பவம் – பலகோணங்களில் விசாரணை ஆரம்பம்

ரம்புக்கனையில் இடம்பெற்ற அமைதியின்மை சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து, ரம்புக்கனையில் நேற்று காலை முதல் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் மார்க்கத்துக்கும் தடை ஏற்படுத்தப்பட்டது. இதனால் ரயில் சேவைகள் முற்றாக ஸ்தம்பித்தன. எரிபொருள் பவுசர் ஒன்றையும் மக்கள் தடுத்து நிறுத்தினர்.

போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தினர். எனினும், போராட்டக்காரர்கள் கலைந்துசெல்லவில்லை. இதனையடுத்து நீர்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பதிலுக்கு போராட்டக்காரர்களும் கல்வீச்சு தாக்குதல் தொடுக்க ஆரம்பித்தனர். இதனால் ரம்புக்கனை பகுதி போர்க்களமாக மாறியது.

சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட பொலிஸார் துப்பாக்கி பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர். இதில் ஒருவர் பலியாகியுள்ளார்.

இதனையடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு இன்னும் தொடர்கின்றது.

ரம்புக்கனையில் ஏற்பட்ட அமைதியின்மையின்போது காயமடைந்த 13 பேரில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவர் பலியாகியுள்ளார்.

அத்துடன், காயமடைந்த 15 பொலிஸ் அதிகாரிகள் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர்.

இந்நிலையில் ரம்புக்கனையில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நால்வர் அடங்கிய விசேட குழுவொன்றை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நியமித்துள்ளது.

இந்த குழுவில் சுலரி லியனகம, மேனகா ஹேரத், லால் வீரசிங்க மற்றும் A.S. நிலந்த ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் ரம்புக்கனைக்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

விசாரணைகளின் போது கண்டறியப்பட்ட விடயங்களின் அடிப்படையில் பரிந்துரைகள் முன்வைக்கப்படவுள்ளன.

அதேவேளை, மேற்படி சம்பவம் தொடர்பில் 20 பொலிஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

Related Articles

Latest Articles