அமைச்சர்களான ஹரின் பெர்ணான்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு எதிராக விதித்திருந்த தடையை ஐக்கிய தேசியக் கட்சி இன்று நீக்கியுள்ளது. அத்துடன், இருவரும் கட்சி செயற்குழுவுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
ஐ.தே.கவின் செயற்குழு கூட்டம் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்றது.
இதன்போதே ஐ.தே.கவை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதுடன், இருவரும் கட்சி செயற்குழுவுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
ஹரின் பெர்ணான்டோவும், மனுஷ நாணயக்காரவும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் சங்கமித்ததையடுத்து , அவர்களின் கட்சி உறுப்புரிமை ஐக்கிய தேசியக் கட்சியால் நீக்கப்பட்டது.
இந்நிலையில் இருவரும் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்டதையடுத்து, அந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, அரசுடன் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டதால் இவ்விருவரையும் கட்சியில் இருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்துள்ளது.










