“10 பேர்ச் காணி உரிமையே நிரந்தரத் தீர்வு”

பெல்மடுல்ல, நாரங்கொட தனியார் தோட்டத்தில், தோட்ட உரிமையாளரால் வீடொன்று உடைக்கப்பட்ட சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நேற்று (13/05/2026) நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

குறித்த தோட்டம் தனியாரால் நிர்வகிக்கப்பட்டு வருவதால், அங்கு வீடு கட்டப்பட்டதாலேயே அது உடைக்கப்பட்டது என அமைச்சரிடம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அப்பிரதேச மக்களுடன் உரையாடிய பிரதி அமைச்சர், இது போன்ற சம்பவங்கள் மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் காலங்காலமாக நடந்து வருவதைச் சுட்டிக்காட்டினார்.

இதன்போது கருத்து வெளியிட்ட பிரதி அமைச்சர்,

“இவ்வாறான அடக்குமுறைகள் நீண்டகாலமாக நடந்து வந்தாலும், தற்போது சமூக வலைத்தளங்கள் வாயிலாகவே இவை வெளிச்சத்திற்கு வந்து மக்கள் மயப்படுத்தப்படுகின்றன.”

“எமது மக்கள் ஒரு தற்காலிக வீட்டை அமைப்பதற்கோ, மரங்களை நடுவதற்கோ, கழிப்பறைகளைக் கட்டுவதற்கோ அல்லது வாழ்வாதாரப் பயிர்செய்கைகளை மேற்கொள்வதற்கோ கூட அனுமதியற்றவர்களாகவும், அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுபவர்களாகவும் இருக்கின்றனர்.”

“முறையான தீர்வுகள் இன்றி, மக்கள் தொடர்ச்சியாகப் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.”

இந்த விவகாரத்திற்குத் தற்போதைய சரியான தீர்வு, மக்களுக்குத் தலா 10 பேர்ச் காணியை வழங்கி, அதில் நிரந்தர வாழ்விடங்களை அமைப்பதேயாகும் எனத் தெரிவித்த பிரதி அமைச்சர், அதற்கான விரைவான நடவடிக்கைகளை தேசிய மக்கள் சக்தி (NPP) அரசு முன்னெடுக்கும் என உறுதியளித்தார்.

Related Articles

Latest Articles