போர்த்துக்கல்லில் நடைபெற்ற பதிவுத் திருமண நிகழ்வில் (civil ceremony), கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது நீண்டகாலக் காதலியான ஜார்ஜினா ரொட்ரிகஸை (Georgina Rodríguez) கரம் பிடித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு மாட்ரிட் நகரில் சந்தித்தது முதல் இணைந்து வாழ்ந்து வரும் இந்த ஜோடி, தங்களின் திருமண மோதிரங்களைக் காண்பிக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளது.
ரொனால்டோவின் அல் நஸர் (Al Nassr) கால்பந்து கழகம் 2026-27 சவுதி புரோ லீக் தொடரைத் தொடங்குவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பே, 41 வயதான ரொனால்டோ இந்தத் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.
போர்த்துகீசிய தலைநகர் லிஸ்பனுக்கு மேற்கே சுமார் 20 மைல் தொலைவில் உள்ள கடற்கரை நகரமான கஸ்காயிஸில் (Cascais) இத்திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அவர்களின் ஐந்து குழந்தைகளும் கலந்துகொண்டனர்.
ஸ்போர்ட்டிங், மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிட், யுவென்டஸ், அல் நஸர் ஆகிய கால்பந்து கழகங்களுக்காகவும் போர்த்துக்கல் தேசிய அணிக்காகவும் விளையாடியுள்ள ரொனால்டோ, தனது தொழில்முறை வாழ்க்கையில் இதுவரை கிட்டத்தட்ட 1,000 கோல்களை அடித்துள்ளார்.
ஆண்கள் உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டிகளில் அதிக முறை பங்கேற்ற அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்சியின் சாதனையைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், ரொனால்டோ சமீபத்தில் தனது ஆறாவது உலகக் கோப்பையில் விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
