சீன வர்த்தக அமைச்சர் வாங் வென்டாவோ தலைமையிலான 115 பேர் கொண்ட உயர்மட்ட பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 28 ஆம் திகதி புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.
சர்ச்சைக்குரிய புதிய அமெரிக்க வரி கட்டணக் கொள்கையால் ஏற்பட்ட தொடர்ச்சியான கொந்தளிப்புக்கு மத்தியிலேயே இக்குழு கொழும்பு வருகின்றது.
இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்தவும், புதிய பொருளாதார முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராயும் நோக்கிலுமே உயர்மட்ட பிரதிநிதிகள் குழு கொழும்புக்கு விஜயம் செய்கின்றது என சீன தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட அரசாங்கத்தின் பொருளாதார வர்த்தக துறைசார்ந்த பிரதிநிதிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்படி குழுவினர் முன்னெடுப்பார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் இலங்கை – சீன வர்த்தக மற்றும் முதலீட்டு மன்றத்தின் மாநாடு எதிர்வரும் 30 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் சிறப்ப விருந்தினராக பங்கேற்கும் சீன வர்த்தக அமைச்சருடன், 77 சீன நிறுவனங்களை பிரதிநிதித்துவம் செய்யும் 115 வர்த்தக பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.