14 நாட்களுக்கு 3 கிலோ அரிசி போதுமா? நாட்டு மக்கள் வீட்டுக் குருவியா?

” குடும்பமொன்றுக்கு 3 கிலோ அரிசி 14 நாட்களுக்கு போதுமானதாக இருக்குமா, அப்படியானால் ஒருவருக்கு ஒருவேளை உணவுக்கு 17 கிராம்தான் ஒதுக்கப்படுகின்றது. வீட்டுக்குருவி, காகங்கள்கூட இதனைவிட அதிகம் உண்ணும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்விநேரத்தின்போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் அரிசி விலை உச்சம் தொட்டுள்ளது. கீரி சம்பவின் விலை 200 ரூபாவை தாண்டியுள்ளது. இந்நிலையில் குடும்பமொன்றுக்கு 14 நாட்களுக்கு 3 கிலோ அரிசி போதும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

3 கிலோ அரிசி என்பது 3 ஆயிரம் கிராம். இதனை 14 நாட்களில் பிரித்தால் நாளொன்றுக்கு 214 கிராமே உண்ண வேண்டும். 4 பேர் கொண்ட குடும்பமொன்றாக இருந்தால் ஒருவேளையில் ஒருவர் 17 கிராமைதான் சாப்பிடவேண்டும். நாட்டு மக்கள் வீட்டுக்குருவியா அல்லது புறாவா?

காகம், குருவிகள்கூட 17 கிராமுக்கு அதிகம் அரிசி திண்கின்றன.”- என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் பந்துல,

” நான் இவ்வாறானதொரு கருத்தை வெளியிடவில்லை. போலியான முறையில் தகவல் பரப்படுகின்றது.” – என்றார்.

Paid Ad