அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
” பல தியாகங்களுக்கு மத்தியிலேயே 19 ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டு அவை பாராளுமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
எனவே, குறித்த சட்டத்தில் ஏதேனும் குறைப்பாடு இருந்தால் அதனை மாற்றியமைக்கலாம். மாறாக 19 ஐ முழுமையாக நீக்குவதற்கு இடமளிக்கமுடியாது. 19 ஐ பாதுகாப்பதற்காக மக்களை அணிதிரட்டி போராடுவோம்.
தகவல் அறியும் சட்டம், சுயாதீன ஆணைக்குழுக்கள் என்பன தொடரவேண்டும்.” – என்றும் ராஜித கூறினார்.