சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது மார்ச் 20 ஆம் திகதி மாலை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
குறித்த பிரேரணைமீது மூன்று நாட்கள் விவாதத்தை எதிரணி கோரி இருந்தாலும் இரு நாட்களே வழங்கப்பட்டுள்ளது. இதன்படி 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற நடவடிக்கை தொடர்பான குழு நேற்றுகூடியபோதே இது தொடர்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசியல் வரலாற்றில் சபாநாயகர் ஒருவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்புக்கு வருவதால் இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நிகழ்நிலை காப்பு சட்ட விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் செயற்படாமை, நாடாளுமன்ற சம்பிரதாயம் மற்றும் அரசமைப்பை மீறியமை, பொலிஸ்மா அதிபர் நியமன விடயத்தில் அரசமைக்குக்கு முரணாக செயற்பட்டமை உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக்கொண்டே நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
இப்பிரேரணைக்கு எதிரணியில் உள்ள அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயத்தில் எதிரணி ஒன்றுபட்டுள்ளது.
அரசின் பலத்தை காட்டுவதற்கு இதனை வாய்ப்பாக பயன்படுத்துவதற்கு ஆளுங்கட்சி முயற்சித்துவருகின்றது. எனவே, அடுத்தவாரம் கொழும்பில் முகாமிட்டு இருக்குமாறு ஆளுங்கட்சியினருக்கு பணிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
