2 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் டெஸ்போட் தமிழ் மகா வித்தியாலயத்தில் இரண்டு மாடி பாடசாலை கட்டிடம்
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நு/ டெஸ்போட் தமிழ் மகா வித்தியாலயத்தில், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு தேவையான இடவசதியை மேம்படுத்தும் வகையில், இரண்டு மாடிகளைக் கொண்ட புதிய பாடசாலை கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (16) இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் பழனிவேல் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சமய வழிபாடுகள் மற்றும் விசேட பூஜை நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதனைத் தொடர்ந்து, புதிய கட்டடத்திற்கான அடிக்கல் அதிதிகளால் நாட்டி வைக்கப்பட்டது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், 2 கோடி ரூபாய் செலவில் இந்த இரண்டு மாடிக் கட்டடம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு தேவையான பல அடிப்படை வசதிகளுடன் கூடியதாக இந்த புதிய கட்டடம் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக காணப்பட்ட பாடசாலையின் இடவசதி தேவைக்கு இந்த புதிய கட்டட நிர்மாணப் பணிகள் தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடிக்கல் நாட்டும் நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் மூக்கையா பாஸ்கரன், நுவரெலியா கல்வித் திணைக்கள அதிகாரி வீரன் விஜயகுமார் உள்ளிட்ட அதிதிகள், பாடசாலை ஆசிரியர்கள், கல்விசார் அதிகாரிகள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
புதிய கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர், பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளுக்கு மேலதிக இடவசதி கிடைப்பதுடன், மாணவர்களுக்கு சிறந்த கற்றல் சூழலையும் ஏற்படுத்திக் கொடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலைவாஞ்ஞன்










