” 20 கிலோ கொழுந்து பறிக்குமாறு தோட்ட நிர்வாகம் வற்புறுத்துகின்றது. அதுமட்டுமல்ல வேலை நாட்களும் திட்டமிட்ட அடிப்படையில் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் எமது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.” – என்று பொகவந்தலாவ தோட்டத் தொழிலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
” சுமார் ஐந்தாண்டுகள்வரை போராடியே நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா நிர்ணயிக்கப்பட்டது. தற்போது வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளதாலும், தொழில் சுமை அதிகரிக்கப்பட்டுள்ளதாலும் சம்பளம் அதிகரிக்கப்பட்டும் பயன் இல்லை. 1000 ரூபா வேண்டுமெனில் 20 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்படுகின்றது.
கடந்த முதலாம் திகதி வேலை வழங்கப்பட்ட நிலையில், எதிர்வரும் 7 ஆம் திகதியே மீண்டும் வேலை வழங்கப்படும் என தோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.” – எனவும் பொகவந்தலாவ பகுதியில் உள்ள தொழிலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
அத்துடன், ஏப்ரல் , மே மாதங்களில் 7 தொடக்கம் 12 நாட்கள் மாத்திரமே இந்த மக்களுக்கான சம்பளம் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், இவர்களின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.










