இன்று (5) கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு, எதிர்வரும் 10 ஆம் திகதி சனிக்கிழமை பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு பதிலாக எதிர்வரும் 13 ஆம் திகதி செவ்வாய்கிழமை கூடும் என தீர்மானித்துள்ளது.
பாராளுமன்ற அமர்வுகளை 10 ஆம் திகதி நடத்துவதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், வாய்மூல விடைக்கான கேள்விகளுக்கு நாள் ஒதுக்கப்பட்டிருந்தது.
இதன்படி, 13ஆம் திகதி வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன், முன்னர் தீர்மானிக்கப்பட்டபடி, பெறுமதி சேர் வரி (திருத்தம்) மற்றும் உள்நாட்டு இறைவரி (திருத்தம்) சட்டமூலங்களின் இரண்டாம் வாசிப்பு விவாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது.
மேலும், ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பை எதிர்வரும் 8ஆம் திகதி மாலை 5 மணிக்கு நடத்துவதற்கு குழு இணக்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைச் சட்டத்தின் கீழ் 03.12.2022 திகதியிட்ட வர்த்தமானி இலக்கம் 2308/62 இல் குறிப்பிடப்பட்டுள்ள உத்தரவை எதிர்வரும் 8 ஆம் திகதி ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
பாராளுமன்றம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் திகதி முதல் கூட்டத்தை கூட்டுவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் குழுவில் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.










