24 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட மகனை தேடி கண்டுபிடித்த பாசக்கார தந்தை

24 ஆண்டுகளாக மகனை தேடி 20 மாகாணங்களில் கிட்டத்தட்ட 5 லட்சம் கி.மீ. பயணம் செய்துள்ளார் அந்த பாசக்கார தந்தை.

சீனாவில் குழந்தை கடத்தல் மிகப்பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் கடத்தப்படுகின்றனர்.

இந்நிலையில் சீனர் ஒருவர் 2 வயதில் கடத்தப்பட்ட தனது மகனை 24 வருடங்களாக தேடி இறுதியில் அவனுடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

கடந்த 1997-ம் ஆண்டு ஷாங்டாங் மாகாணத்தை சேர்ந்த குவோ கேங்டாங் என்பவரின் 2 வயது மகன் வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்தபோது கடத்தல்காரர்கள் இருவர் அவனை கடத்தி சென்று விற்று விட்டனர்.

போலீசார் அந்த கடத்தல்காரர்களை கைது செய்த போதும் குவோ கேங்டாங்கின் மகனை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து தனது மகனை தானே தேடி கண்டுபிடிக்க முடிவு செய்த குவோ கேங்டாங் தன்னிடம் இருந்த பணத்தை வைத்து ஒரு மோட்டார் சைக்கிளை வாங்கி ஒவ்வொரு மாகாணமாக சென்று தேடினார்.

கையில் இருந்த மொத்த பணமும் தீர்ந்து போன நிலையில் தனது பயணத்தை தொடர்வதற்காக அவர் பிச்சை எடுத்தார். இந்த பயணத்தின் போது பலமுறை விபத்துக்குள்ளாகி அவரது எலும்புகள் முறிந்தன. வழிப்பறி கொள்ளையர்களிடம் சிக்கி பணம் உள்ளிட்டவற்றை இழந்துள்ளார்.

ஆனாலும் அவர் தனது தேடலை நிறுத்தவில்லை. தனது மகனை தேடி 20 மாகாணங்களில் கிட்டத்தட்ட 5 லட்சம் கி.மீ. பயணம் செய்தார்.

அவரின் இந்த அயராத முயற்சிக்கு 24 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பலன் கிடைத்துள்ளது. ஆம் 2 வயதில் கடத்தப்பட்ட தனது மகனை அவர் கண்டுபிடித்து அவனுடன் இணைந்து விட்டார்.

Related Articles

Latest Articles