29 ஆம் திகதி நுவரெலியாவில் போராட்டம்: மக்கள் போராட்ட முன்னணி ஏற்பாடு

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் இதுவரை முறையான நிவாரணங்கள் வழங்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டி, எதிர்வரும் நவம்பர் 29 ஆம் திகதி நுவரெலியா நகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமொன்றை நடத்த மக்கள் போராட்ட முன்னணி ஏற்பாடு செய்துள்ளது.

இதனை முன்னிட்டு, குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பான விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களைப் பொதுமக்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கை நேற்று (23) முன்னெடுக்கப்பட்டது.

மக்கள் போராட்ட முன்னணியின் ஏற்பாட்டில், வசந்த முதலிகே தலைமையில் நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் நுவரெலியா நகரில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது, நுவரெலியா பேருந்து நிலையம் மற்றும் நுவரெலியா மத்திய சந்தை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த மக்கள் போராட்ட முன்னணியின் பிரதிநிதி வசந்த முதலிகே, டித்வா புயலினால் பாதிக்கப்பட்டு சுமார் ஒரு வருட காலமாகியும் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு இதுவரை உரிய தீர்வுகள் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

குறிப்பாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிரந்தர வீடுகளை நிர்மாணிப்பதற்கான காணி ஒதுக்கீடுகள் இதுவரை முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்றும், வாடகை வீடுகளில் வசிக்கும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறு மாத காலத்திற்கு மாத்திரமே வாடகை நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், சில பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறித்த நிவாரணங்கள் கூட முறையாகக் கிடைக்காத நிலை காணப்படுவதாகவும், இதனால் மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்களை விரைவாக வழங்குதல், நிரந்தர வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான காணி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 29ஆம் திகதி நுவரெலியாவில் பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மக்கள் போராட்ட முன்னணி தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles