ஹட்டன் கல்வி வலயத்தின் உதவிக்கல்விப் பணிப்பாளராகச் சேவையாற்றிய வணக்கத்திற்குரிய ஆசிர்வாதம் ஜோர்ஜ் வில்சன், இன்று (30) தனது 36 வருடகாலக் கல்விப்பணியிலிருந்து ஓய்வுபெறுகின்றார்.
ஆசிர்வாதம் – மேரி தம்பதியினரின் நான்காவது புதல்வரான இவர், கல்வி உலகிற்கு ஆற்றிய பங்களிப்புகள் அளப்பரியனவாகும்.
இவர் தனது ஆரம்பக் கல்வியை (தரம் 1 முதல் 5 வரை) கொத்மலை தேர்தல் தொகுதிக்குட்பட்ட ஹப்புகஸ்தலாவ அல்கொல்ல தமிழ் வித்தியாலயத்திலும், பின்னர் அல் மின்ஹாஜ் தேசிய கல்லூரியிலும் கற்றார்.
அதன் பின்னர் நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரி மற்றும் ஹட்டன் ஹைலன்ஸ் மத்திய கல்லூரி ஆகியவற்றில் தனது உயர்கல்வியைப் பூர்த்தி செய்தார்.
இலங்கைத் திருநாட்டின் கல்விச் சேவையில் 1990.02.07 அன்று கணித பாட ஆசிரியராக, வட்டவளை தமிழ் மகா வித்தியாலயத்தில் தனது முதல் நியமனத்தைப் பெற்றுக்கொண்டார்.
அக்காலத்தில் அங்கு நிலவிய ஆசிரியர் பற்றாக்குறைக்கு மத்தியிலும், அர்ப்பணிப்புடன் கற்பித்து அம்மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளக் காரணமாக இருந்தார்.
பாடவிதானச் செயற்பாடுகள் மட்டுமன்றி, மாணவர்களின் இணைபாட விதானச் செயற்பாடுகளின் வளர்ச்சிக்கும் இவர் முக்கியப் பங்காற்றினார்.
இதனைத் தொடர்ந்து, 1995.03.08 அன்று வட்டவளை மவுண்ஜீன் பாடசாலையின் அதிபராகப் பொறுப்பேற்றார். இவர் நியமனம் பெறும்போது, அப் பாடசாலை ஒரு சிறிய தோட்ட உத்தியோகத்தரின் விடுதியிலேயே இயங்கி வந்தது.
அக்காலத்தில் 50-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. எனினும், இவரின் இடைவிடாத முயற்சியினாலும் அர்ப்பணிப்பினாலும் அப் பாடசாலை மூடப்படாமல் பாதுகாக்கப்பட்டதோடு, இன்று தரம் 11 வரை படிப்படியாக உயர்த்தப்பட்டுள்ளது.
போதிய கட்டிட வசதிகளையும் ஆசிரிய வளங்களையும் பெற்றுக்கொடுத்து, அப்பிரதேசத்தின் கல்வி வளர்ச்சிக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார்.
பின்தங்கிய தோட்டப் பகுதியான அங்கிருந்து 15-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உருவாவதற்கான அடித்தளத்தையும் இவரே ஏற்படுத்திக் கொடுத்தார்.
பின்னர், 2021.01.01 அன்று ஹட்டன் கல்வி வலயத்தின் உதவிக்கல்விப் பணிப்பாளராகப் பதவியேற்றார். வலய மட்டத்திலான கல்வி அபிவிருத்திக் குழுவின் மூலமாக முன்னெடுக்கப்பட்ட அனைத்துச் செயல்திட்டங்களிலும் அர்ப்பணிப்புடன் செயலாற்றினார்.
குறிப்பாக, பாடசாலை செல்லாத மாணவர்களைக் கண்டறிந்து, யுனிசெப் (UNICEF) நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் 11 கற்றல் மையங்களை உருவாக்கி, அவர்களை மீண்டும் பாடசாலைகளில் இணைத்த பெருமை இவரையே சாரும்.
தனது பணிக்காலம் முழுவதும் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் வலய அலுவலகப் பணியாளர்களோடு மிகச் சிறந்த முறையில் இணங்கிச் செயற்பட்டதோடு, கல்விச் சமூகம் எதிர்கொண்ட பல பிரச்சினைகளுக்குச் சுமுகமான ஆலோசனைகளையும் தீர்வுகளையும் வழங்கினார்.
இதன் காரணமாக, இவருடைய ஓய்வையொட்டிப் பல பாடசாலைகளும் கல்விச் சமூகமும் இவரை அழைத்து பாராட்டு விழாக்களை நடத்தி கௌரவித்து வருகின்றன. இன்றுடன் ஓய்வுபெறும் இவரின் ஓய்வுக் காலம் ஆரோக்கியமாகவும் சிறப்பாகவும் அமைய ஹட்டன் கல்வி வலயத்தின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணிக்குழாமினர் தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.
மஸ்கெலியா நிருபர்










