40,000 ஆண்டுகளுக்குப் பின்னரும் தொடரப்போகும் பயணம்: வாயேஜர் 1 பற்றிய வியப்பூட்டும் தகவல்கள்

மனிதர்களால் உருவாக்கப்பட்ட விண்கலங்களில் பூமியிலிருந்து மிகத் தொலைவில் பயணித்துக்கொண்டிருக்கும் வாயேஜர் 1 (Voyager 1), தற்போது பூமியிலிருந்து ஒரு ஒளி நாள் தொலைவை எட்டியுள்ளது. சுமார் 49 ஆண்டுகளாக விண்வெளியில் பயணித்து வரும் இந்த விண்கலம், மனித விண்வெளி ஆய்வுப் பயணத்தில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லைப் பதிவு செய்துள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, 1977ஆம் ஆண்டு செப்டெம்பர் 5ஆம் திகதி வாயேஜர் 1 விண்கலத்தை விண்ணில் ஏவியது. வியாழன், சனி உள்ளிட்ட சூரியக் குடும்பத்தின் வெளிப்புறக் கோள்களை நெருக்கமாக ஆய்வு செய்வதே இதன் பிரதான நோக்கமாக இருந்தது. இதற்கு இணையாக வாயேஜர் 2 என்ற மற்றுமொரு விண்கலமும் அதே ஆண்டில் விண்ணில் செலுத்தப்பட்டது.

நாசாவின் கணக்கீடுகளின்படி, 2026 நவம்பர் 18ஆம் திகதி அமெரிக்க கிழக்குக் கடற்கரை நேரப்படி அதிகாலை 5.16 மணியளவில், வாயேஜர் 1 பூமியிலிருந்து ஒரு ஒளி நாள் பயணத் தொலைவை எட்டியது. அதாவது, பூமியிலிருந்து சுமார் 1,609 கோடி மைல்கள் அல்லது 2,590 கோடி கிலோமீற்றர் தொலைவில் அது பயணித்துக்கொண்டிருக்கிறது.

ஒளி நாள் என்றால் என்ன?

விண்வெளி ஆய்வுகளில் ஒளி ஆண்டு (Light-Year) என்ற அளவீடு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அதேபோன்று ஒளி நாள் (One Light-Day) என்பதும் தூரத்தைக் கணக்கிடுவதற்கான ஓர் அளவீடாகும். இது கால அளவைக் குறிப்பதில்லை.

ஒளி ஒரு நொடிக்கு சுமார் 3 இலட்சம் கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கிறது. அந்த வேகத்தில் 24 மணித்தியாலங்களில் ஒளி கடக்கும் தூரமே ஒரு ஒளி நாள் எனப்படுகிறது. இதன் தூரம் சுமார் 2,590 கோடி கிலோமீற்றர்களாகும்.

மணிக்கு சுமார் 61,000 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்கும் வாயேஜர் 1, இந்தத் தொலைவை அடைவதற்கு ஏறத்தாழ 49 ஆண்டுகள் எடுத்துள்ளது. இந்த மைல்கல் விண்கலத்தின் சுற்றுப்புறத்தில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தாவிட்டாலும், மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு பொருள் எவ்வளவு தொலைவுக்குப் பயணித்துள்ளது என்பதை எடுத்துக்காட்டும் முக்கியமான அளவீடாக அமைந்துள்ளது.

வியாழன், சனி கோள்களில் முக்கிய ஆய்வுகள்

விண்ணில் ஏவப்பட்டதைத் தொடர்ந்து வாயேஜர் 1 தனது பயணத்தில் 1979ஆம் ஆண்டு வியாழன் கோளையும், 1980ஆம் ஆண்டு சனிக் கோளையும் நெருங்கிக் கடந்து சென்றது.

இந்தப் பயணத்தின்போது குறித்த கோள்களின் வளிமண்டலம், காந்தப்புலம் மற்றும் அவற்றின் நிலவுகள் தொடர்பான முக்கியமான தரவுகளையும் புகைப்படங்களையும் பூமிக்கு அனுப்பியது. இதன் மூலம் வெளிப்புறக் கோள்கள் தொடர்பான மனிதகுலத்தின் அறிவியல் புரிதலுக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியது.

அதன் பின்னர் வாயேஜர் 1 தனது பயணத்தை சூரியக் குடும்பத்தின் எல்லைக்கு அப்பால் தொடர்ந்தது. 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சூரியனிலிருந்து வெளிப்படும் துகள்கள் மற்றும் காந்தப்புலங்களால் உருவாகும் ஹீலியோஸ்பியர் (Heliosphere) எனப்படும் பகுதியின் எல்லையைக் கடந்து விண்மீன்களுக்கு இடையிலான விண்வெளிக்குள் (Interstellar Space) நுழைந்தது.

இதன் மூலம் விண்மீன்களுக்கு இடையிலான விண்வெளியை அடைந்த முதலாவது விண்கலம் என்ற பெருமையைப் பெற்றது. தற்போது அந்தப் பகுதியில் நேரடியாக ஆய்வுகளை மேற்கொண்டு தகவல்களை அனுப்பும் விண்கலங்களாக வாயேஜர் 1 மற்றும் வாயேஜர் 2 ஆகிய இரண்டும் உள்ளன.

மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ளும் தொழில்நுட்பம்

வாயேஜர் விண்கலங்கள் இத்தனை நீண்ட காலமாகச் செயல்படுவதற்கு அவற்றில் பயன்படுத்தப்படும் தனித்துவமான மின்சக்தி அமைப்பும் முக்கிய காரணமாகும்.

புளூட்டோனியம்-238 (Plutonium-238) என்ற கதிரியக்கப் பொருள் மெதுவாகச் சிதைவடையும்போது உருவாகும் வெப்பத்தை மின்சாரமாக மாற்றும் தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்படுகிறது. கதிரியக்க வெப்ப மின்னியற்றி (Radioisotope Thermoelectric Generator – RTG) எனப்படும் இந்த அமைப்பில் நகரும் இயந்திரப் பாகங்கள் இல்லாததால் நீண்ட காலம் செயல்படக்கூடியதாக உள்ளது.

எனினும், காலப்போக்கில் புளூட்டோனியம் சிதைவடைவதால் உருவாகும் வெப்பமும் அதன்மூலம் கிடைக்கும் மின்சாரமும் குறைந்து வருகின்றன. நாசாவின் கணக்கீட்டின்படி, வாயேஜர் விண்கலங்கள் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 4 வாட்ஸ் மின்சாரத்தை இழந்து வருகின்றன.

இதனால் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் நோக்கில் தேவையற்ற கருவிகளை அணைத்தல், சில அறிவியல் கருவிகளின் செயல்பாட்டைக் குறைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை நாசா மேற்கொண்டு வருகிறது.

40,000 ஆண்டுகளுக்குப் பின்னரும் தொடரும் பயணம்

எதிர்காலத்தில் பூமியுடன் தகவல் பரிமாற்றம் செய்யும் திறனை வாயேஜர் 1 இழந்தாலும், விண்வெளியில் அதன் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கும். சுமார் 40,000 ஆண்டுகளுக்குப் பின்னர் கிளீஸ் 445 (Gliese 445) என்ற விண்மீனுக்கு அருகே இந்த விண்கலம் கடந்து செல்லும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாயேஜர் 1 விண்கலத்தில் தங்கத்தால் உருவாக்கப்பட்ட ‘கோல்டன் ரெக்கார்ட்’ (Golden Record) எனப்படும் தங்கத் தகடு ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. பூமியின் இயற்கை ஒலிகள், இசை, பல்வேறு மொழிகளில் பதிவுசெய்யப்பட்ட வாழ்த்துச் செய்திகள் மற்றும் படங்கள் உள்ளிட்டவை அதில் இடம்பெற்றுள்ளன.

மனிதகுலத்தின் கலாசாரம், அறிவியல் மற்றும் பூமியின் அடையாளங்களை விண்வெளிக்குக் கொண்டு செல்லும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்தத் தங்கத் தகடு, வாயேஜர் 1 இன் பயணத்திற்கு மேலும் தனித்துவத்தைச் சேர்க்கிறது.

பூமியுடனான தகவல் தொடர்பு எதிர்காலத்தில் முற்றாகத் துண்டிக்கப்பட்டாலும், மனிதர்களின் அறிவியல் சாதனைகளுக்கான அடையாளமாக வாயேஜர் 1 விண்வெளியில் தனது பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கும்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles