60 ஆண்டுகளாகப் புனரமைக்கப்படாத தோட்டப் பாதை!
3,250 மக்களின் போக்குவரத்துக்கு பெரும் அவதி – அவசர சிகிச்சைக்குக் கூட செல்ல முடியாத அவலம்
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பிரவுன்சீக் தோட்டத்தின் லெட்சுமி பிரிவு, பால் காமம் பிரிவு மற்றும் சின்ன நடுத்தோட்டம் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் பிரதான வீதி, கடந்த 60 ஆண்டுகளாகப் புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாகக் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மஸ்கெலியா – சாமிமலை பிரதான வீதியிலிருந்து பிரவுன்சீக் தோட்டத்தின் பிரதான பிரிவு ஊடாக இந்த மூன்று பிரிவுகளுக்கும் செல்லும் சுமார் 4 கிலோமீற்றர் நீளமான வீதியே இவ்வாறு மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.
இந்த மூன்று பிரிவுகளிலும் சுமார் 900 குடும்பங்களைச் சேர்ந்த 3,250 பேர் வசித்து வருகின்றனர். அத்துடன், இப்பகுதியில் தரம் 1 முதல் தரம் 11 வரை வகுப்புகளைக் கொண்ட மோட்டிங்ஹேம் தமிழ் வித்தியாலயம் அமைந்துள்ளது. இப்பாடசாலையில் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்பதுடன், 30க்கும் அதிகமான ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர்.
குறித்த வீதி புனரமைக்கப்படாமல் காணப்படுவதால், அப்பகுதி மக்கள் நாளாந்தம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நோயாளர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதில் பெரும் சிக்கல்கள் நிலவுகின்றன.
வீதியின் மோசமான நிலையால், கர்ப்பிணிப் பெண்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே பிரசவம் இடம்பெறும் சம்பவங்களும் உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். அதேபோன்று, அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளர்களை முச்சக்கரவண்டி அல்லது 1990 அவசர அம்புலன்ஸ் சேவை மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதிலும் தாமதம் ஏற்படுவதாகவும், சில சந்தர்ப்பங்களில் வைத்தியசாலையைச் சென்றடைவதற்கு முன்னரே உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும், இப்பகுதிகளில் இருந்து உயர்தர வகுப்புகளுக்காக வெளியிடங்களுக்குச் செல்லும் மாணவர்களும் தற்போது பெய்துவரும் கனமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வீதியில் தேங்கும் மழைநீரும் சகதியும் மாணவர்களின் வெள்ளைச் சீருடைகளில் படிவதால், அவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
அவசரத் தேவைகளுக்காக முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி இவ்வீதியூடாகப் பயணிக்க முயற்சித்தாலும், வீதியின் மோசமான நிலை காரணமாகப் பயணிக்க பலரும் மறுப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது, தோட்டத்துக்குச் சொந்தமான உழவு இயந்திரங்கள் மூலம் தேயிலைக் கொழுந்துகளைத் தேயிலைத் தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்வதைத் தவிர, ஏனைய வாகனப் போக்குவரத்துகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன.
எனவே, 60 ஆண்டுகளாகப் புனரமைக்கப்படாமல் காணப்படும் இந்த வீதியை உடனடியாகப் புனரமைத்து, தமது போக்குவரத்துப் பிரச்சினைக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்
