முதலில் ஜனாதிபதி தேர்தலே நடத்தப்படும், இது நூறு வீதம் உறுதி என்று அடித்து கூறியுள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான ஆசு மாரசிங்க.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பொதுத்தேர்தல் நடத்தப்படும் என எதிரணிகள் அறிவித்துவரும் நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும். பொதுத்தேர்தலுக்கு காலம் உள்ளது. எனவே, ஜனாதிபதி தேர்தலே முதலில் நடத்தப்படும் என்பது நூறு வீதம் உறுதி.
தேர்தலில் தேசிய வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க களமிறங்குவார். பரந்தப்பட்ட கூட்டணி அமைக்கப்படும். நெருக்கடி நிலையில் இருந்து ஜனாதிபதியும், அமைச்சர்களுமே அர்ப்பணிப்புடன் நாட்டை மீட்டனர்.
அதேவேளை, சம்பள உயர்வு தொடர்பில் மத்திய வங்கி எடுத்துள்ள முடிவு தவறு. அது மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும்.” – என்றார்.










