நானுஓயா குறுக்கு வீதியில் விபத்து – இருவர் படுகாயம்!

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் நேற்று வியாழக்கிழமை (07) பிற்பகல் நுவரெலியா பிரதேச சபைக்கு முன்பாக லொறியொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் மோட்டார் சைக்கிள் சாரதி மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் லொறி சாரதியை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியாவில் இருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் உள்ள வாகன பழுது நீக்கும் கடையில் லொறியின் சில்லுக்கு காற்று நிரப்பிக்கொண்டு நுவரெலியாவை நோக்கி சென்ற லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நானுஓயா நிருபர்

Related Articles

Latest Articles