விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு – வட்டவளையில் சோகம்
வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொசல்ல பின்ஓய்யா மேல் பிரிவு தோட்டத்தில் வீடொன்றுக்கு அருகில் உள்ள விவசாய காணியில் அமைக்கப்பட்டுள்ள கிணற்றில் தவறி விழுந்து மூன்றரை வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (21.03.2024) வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் கதிர்வேல் ரோஹித் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார் என்று சம்பவம் தொடர்பில் விசாரணை செய்துவரும் வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுவன் தனது வீட்டுக்கு முன்னால் பந்து ஒன்றை உருட்டி விளையாடி கொண்டிருந்துள்ள நிலையில் திடீரென சிறுவன் காணாமல்போயுள்ளார் எனவும், பிறகு அச்சிறுவனை தந்தை மற்றும் அருகில் உள்ள வீட்டார்கள் தேடியபோது சிறுவன் கிணற்றில் விழுந்து கிடந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவருகின்றது.
இதையடுத்து கிணற்றிலிருந்து மீட்டெடுத்த சிறுவனைவட்டவளை பிரதேச வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிறுவனை பரிசோதித்த வைத்தியர்கள் சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில் சம்பவம் தொடர்பில் வட்டவளை பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் தாய் வெளிநாட்டு தொழில்வாப்புக்கு சென்றுள்ளதாகவும் தந்தையின் பாதுகாப்பில் சிறுவன் இருந்ததாகவும் தெரியவருகின்றது. அத்துடன் சிறுவனின் சடலம் பிரேத பரிசோதணைக்காக வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆ.ரமேஷ்










