மலையகத்தில் கல்வி வளர்ச்சியை அடிப்படையாகக்கொண்டு உன்னதமான சேவையை வழங்கிவரும் ‘மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் இம்முறை க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பெருந்தோட்டப்பகுதி பாடசாலை மாணவர்கள் பயன்பெறும் வகையில் மாதிரி வினாத்தாள்கள் அடங்கிய ‘அறிவொளி’ கையேடுகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன.
கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடத்துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த ஆசிரியர்களால் மாதிரி வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
கண்டி, நுவரெலியா, மாத்தளை, பதுளை, மொனறாகலை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி, மாத்தறை, குருணாகல் மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் 20 ஆயிரம் பெருந்தோட்ட மாணவர்கள் இதன்மூலம் பயன்பெறவுள்ளனர் என்று மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் தலைவர் ஏ. சிவஞானம் தெரிவித்தார்.
“ இம்முறை அனைத்து பெருந்தோட்டப்பகுதி பாடசாலைகளையும் உள்ளடக்கும் வகையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. நாளையுடன் (31) விண்ணப்பத் திகதி முடிவடைகின்றது. மாதிரி வினாத்தாள் அச்சுபணி இடம்பெற்றுவரும் நிலையில், அடுத்த மாதம் விநியோகப் பணி இடம்பெறும்.” – எனவும் அவர் கூறினார்.










